மத்திய அரசு ஊழியர்களுக்கான 8-வது ஊதியக் குழுவை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை தில்லியில் இன்று கூடியது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார். இதன்படி, அரசு ஊழியர்களுக்கான 8-வது ஊதியக் குழுவை அமைக்க அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
8-வது ஊதியக் குழுவின் உறுப்பினர்கள் விவரம் உள்பட மற்ற விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மத்திய ஊதியக் குழு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படும். அரசு ஊழியர்களுக்கான ஊதிய விவரங்கள், சலுகைகள் உள்ளிட்ட அம்சங்கள் இந்தக் குழுவால் ஆய்வு செய்யப்பட்டு, மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களைப் பரிந்துரை செய்யும். பணவீக்கம், பொருளாதாரச் சூழல் உள்ளிட்டவை கருத்தில் கொள்ளப்பட்டு மாற்றங்கள் முடிவு செய்யப்படும்.
7-வது ஊதியக் குழு மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கால் பிப்ரவரி 28, 2014-ல் அமைக்கப்பட்டது. நவம்பர் 19, 2015-ல் இந்தக் குழு அறிக்கையைச் சமர்ப்பித்தது. இதன் அடிப்படையில் ஜனவரி 1, 2016 முதல் பரிந்துரைகள் அமல்படுத்தப்படத் தொடங்கின.
மேலும், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் இஸ்ரோ விண்வெளி மையத்தில் ரூ. 3,984.86 கோடி செலவில் மூன்றாவது ஏவுதளத்தை அமைக்க மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 48 மாதங்களுக்குள் மூன்றாவது ஏவுதளத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.