தமிழக காவல்துறை, சிறைத்துறை, ஊர்காவல் படையைச் சேர்ந்த 28 பேருக்கு குடியரசு தினத்திற்கான குடியரசுத் தலைவர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிறப்பாகப் பணியாற்றும் காவல்துறையினருக்கு குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தில், குடியரசுத் தலைவர் பதக்கங்கள் வழங்கப்படும். இந்நிலையில், நடப்பாண்டின் குடியரசு தினத்தை முன்னிட்டு வீரதீர செயலுக்கான பதக்கங்கள், மெச்சத்தக்க சேவைக்கான பதக்கங்கள் மற்றும் குடியரசுத் தலைவரின் தகைசால் சேவைக்கான பதக்கங்களை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (ஜன.25) அறிவித்துள்ளது.
வீரதீர செயலுக்காக மொத்தம் 95 பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை. மெச்சத்தக்க சேவைக்கான பதக்கங்கள் மொத்தம் 746 நபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் தமிழக காவல்துறையைச் சேர்ந்த 21 பேரும், சிறைத்துறையைச் சேர்ந்த 4 பேரும் இடம்பெற்றுள்ளனர்.
குறிப்பாக, காவல் கண்காணிப்பாளர்கள் ஹெச். ஜெயலட்சுமி, ஜி. ஸ்டாலின், ஜெ.பி. பிரபாகர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் எஸ். தினகரன், டி. பிரபாகரன், துணை காவல் கண்காணிப்பாளர்கள் ஆர். மதியழகன், எம். பாபு, பி. சந்திரசேகரன், கே. வேலு உள்ளிட்டோருக்கு மெச்சத்தக்க சேவைக்கான பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதே போல, குடியரசுத் தலைவரின் தகைசால் சேவைக்கான பதக்கங்கள் மொத்தம் 101 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் தமிழக காவல்துறை ஐ.ஜி.க்கள் ராதிகா, துரை குமார் மற்றும் ஊர்காவல் படையைச் சேர்ந்த உதவி கமாண்டர் மஞ்சித் சிங் நய்யார் என 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.