இந்தியா

பல்வேறு மாநில ஆளுநர்களை மாற்றி குடியரசுத் தலைவர் உத்தரவு!

மணிப்பூர் மாநில ஆளுநராக முன்னாள் மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.

ராம் அப்பண்ணசாமி

மணிப்பூர், மிசோரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்களை மாற்றி உத்தரவிட்டுள்ளார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

ஆளுநர்களின் நியமனம் குறித்து தில்லி குடியரசுத் தலைவர் மாளிகை நேற்று (டிச.25) செய்திக்குறிப்பு வெளியிட்டது. இதன்படி ஒடிஷா ஆளுநராக இருந்த ரகுபர் தாஸின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளார் குடியரசுத் தலைவர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பழங்குடியினர் அல்லாத முதல்வராக 2014 முதல் 2019 வரை பதவி வகித்துள்ளார் ரகுபர் தாஸ். கடந்த அக்டோபர் 2023-ல் ஒடிஷா ஆளுநராக நியமிக்கப்பட்ட ரகுபர் தாஸ், 14 மாதங்களில் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தற்போது மிசோரம் மாநில ஆளுநராக உள்ள ஹரி பாபு கம்பம்பட்டி, ஒடிசா மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். மிசோரம் மாநில ஆளுநராக முன்னாள் ராணுவத் தளபதி வி.கே. சிங் நியமிக்கப்பட்டுள்ளார். 2014 முதல் 2024 வரை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் இணையமைச்சராகப் பதவி வகித்துள்ளார் வி.கே. சிங்.

மேலும், மணிப்பூர் மாநில ஆளுநராக முன்னாள் மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா நியமிக்கப்பட்டுள்ளார். மணிப்பூர் ஆளுநர் பணியை அஸ்ஸாம் ஆளுநர் லக்‌ஷ்மண் ஆச்சாரியா கூடுதலாக கவனித்து வந்தார்.

பிஹார் மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் கேரள ஆளுநராகவும், கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பிஹார் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் ஆளுநர்கள் பொறுப்பேற்கும் நாள் முதல் இந்த நியமனங்கள் நடைமுறைக்கு வரும் என செய்திக்குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.