ANI
இந்தியா

17-வது மக்களவையைக் கலைத்தார் குடியரசுத் தலைவர்

கிழக்கு நியூஸ்

மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 17-வது மக்களவையைக் கலைத்தார்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியான நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை கூடியது. 17-வது மக்களவையின் பதவிக் காலம் ஜூன் 16-ல் நிறைவடையும் நிலையில், இதைக் கலைக்க மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்த பிரதமர் மோடி, அமைச்சர்கள் குழு மற்றும் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார். பிரதமர் மற்றும் அமைச்சரவைக் குழுவின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர், புதிய ஆட்சி அமையும் வரை காபந்தாக செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில், அமைச்சரவைக் குழுவின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் 17-வது மக்களவையைக் கலைத்தார்.

இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, பிரதமர் மோடியின் இல்லத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி வரும் சனியன்று பிரதமராகப் பதவியேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.