இந்தியா

நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை

ராம் அப்பண்ணசாமி

18-வது மக்களவைத் தேர்தலுக்குப் பிறகான நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றி வருகிறார்.

தொடர்ந்து இரண்டாவது முறையாக மக்களவை சபாநாயகராக தேர்வாகியுள்ள ஓம் பிர்லாவுக்குத் தன் உரையில் வாழ்த்து தெரிவித்தார் குடியரசுத் தலைவர். மேலும், நடந்து முடிந்த 18-வது மக்களவைத் தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஜம்மு காஷ்மீர் மக்கள் வாக்களித்துள்ளதாகக் கூறி அவர்களுக்குப் பாராட்டு தெரிவித்தார்.

`60 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து 3-வது முறையாக ஒரே அரசை மக்கள் தேர்வு செய்துள்ளனர். இந்திய மக்களின் எதிர்பார்ப்பை இந்த நாடாளுமன்றம் நிறைவேற்றும். நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கையில் பல முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்படும்’ எனத் தன் உரையில் குறிப்பிட்டார் குடியரசுத் தலைவர்.

`உலக அளவில் பல்வேறு துறைகளில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. பல புதிய தொழில்நுட்பங்களில் நாடு முன்னேற்றம் கண்டு வருகிறது. விவசாயம், தொழில், சேவை என நாட்டின் அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசால் சம முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தற்சார்பு இந்தியாவுக்கான கொள்கைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன,’ எனத் தன் உரையில் பெருமிதம் தெரிவித்தார் முர்மு.

`இன்று விளையாட்டுத் துறையில் நம் இளைஞர்களுக்குப் பல புதிய வாய்ப்புகள் கிடைக்கின்றன. எனது அரசின் முயற்சிகள் காரணமாக இளம் தடகள வீரர்கள் சர்வதேச அளவில் பதக்கங்களை வென்று வருகின்றனர். இந்தச் சாதனைகளை முன்னெடுத்து செல்ல, 2036 ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார் முர்மு.

`இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்ற மத்திய அரசு பலவேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இன்றைக்கு உலகத்தின் 15 சதவீத வளர்ச்சிக்கு இந்தியா பங்களிக்கிறது. 2021 முதல் 2024 வரை, இந்தியாவின் சராசரி வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கிறது’ என நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து தன் உரையில் குறிப்பிட்டார் முர்மு.

குடியரசுத் தலைவர் உரையாற்றியபோது மணிப்பூர், நீட், அக்னிவீர் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். மேலும் குடியரசுத் தலைவரின் உரையை ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள் புறக்கணித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் உரை நிறைவு பெற்றதும் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.