அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கிய குடியரசுத் தலைவர் @rashtrapatibhvn
இந்தியா

அத்வானிக்கு பாரத ரத்னா: நேரில் சென்று வழங்கிய குடியரசுத் தலைவர்

பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் உடனிருந்தனர்.

யோகேஷ் குமார்

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.

பிகார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்குர் உட்பட 4 பேருக்கு பாரத ரத்னா விருது நேற்று வழங்கப்பட்டது.

மறைந்த முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சரண் சிங், வேளான் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன், பிகார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்குர் மற்றும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே. அத்வானி ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கர்ப்பூரி தாக்குர், சரண் சிங், நரசிம்ம ராவ், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோரின் வாரிசுகளிடம் பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உட்பட பலரும் பங்கேற்றனர்.

இந்நிலையில் வயது மூப்பு காரனத்தால் எல்.கே. அத்வானி குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வரமுடியாததால், அவருக்கு வீடு தேடி சென்று பாரத ரத்னா விருது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று எல்.கே. அத்வானிக்கு அவரது இல்லத்தில் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அத்வானியின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவருக்கு விருதை வழங்கியுள்ளார்.

அப்போது பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் உடனிருந்தனர்.