இந்தியா

புதிய ஆளுநர்களை நியமித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

மஹாராஷ்டிர மாநில ஆளுநராக, தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்

ராம் அப்பண்ணசாமி

பல்வேறு மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்களை நியமித்துள்ளார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

மஹாராஷ்டிர மாநில ஆளுநராக, தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகப் பதவி வகித்து வந்த ராதாகிருஷ்ணன், தெலங்கானா மாநில ஆளுநர் பொறுப்பையும், புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார்.

கேரளாவைச் சேர்ந்த கைலாஷ்நாதன் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒய்வு பெற்ற் ஐஏஎஸ் அதிகாரியான கைலாஷ்நாதன், குஜராத் மாநில முதல்வரின் முதன்மைச் செயலாளராகப் பதவி வகித்துள்ளார்.

தெலங்கானா மாநில ஆளுநராக, திரிபுராவைச் சேர்ந்த ஜிஷ்ணு தேவ் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திரிபுரா மாநிலத்தின் துணை முதல்வராக 2018 முதல் 2023 வரை பதவி வகித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார் கங்வார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2014 முதல் 2021 வரை மத்திய அரசில் இணை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.

பஞ்சாப் மாநில ஆளுநராகவும், சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் ஆட்சியாளராகவும், ராஜஸ்தானைச் சேர்ந்த குலாப் சந்த் கட்டாரியா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அஸ்ஸாம் மாநில ஆளுநராகப் பதவி வகித்து வருகிறார் கட்டாரியா. இவர் 2014 முதல் 2018 வரை ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.

ஹரிபாவ் கிஸன்ராவ் பாக்டே ராஜஸ்தான் மாநில ஆளுநராகவும், சி.எச். விஜயசங்கர் மேகாலயா மாநில ஆளுநராகவும், ராமன் தேக்கா சத்தீஸ்கர் மாநில ஆளுநராகவும், லக்‌ஷ்மண் பிரசாத் ஆச்சாரியா அஸ்ஸாம் மாநில ஆளுநராகவும், ஓம் பிரகாஷ் மாத்தூர் சிக்கிம் மாநில ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் மாநில ஆளுநராகவும், சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் ஆட்சியாளராகவும் பதவி வகித்து வந்த பன்வாரி லால் புரோஹித்தின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளார் குடியரசுத் தலைவர். இவர் 2017 முதல் 2021 வரை தமிழ்நாட்டின் ஆளுநராகப் பதவி வகித்துள்ளார்.