ANI
ANI
இந்தியா

குடியரசுத் தலைவர் உரை நல்லாட்சிக்கான வரைபடத்தை முன்வைத்தது: பிரதமர் மோடி

ராம் அப்பண்ணசாமி

நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவரின் உரையை மேற்கோள்ளகாட்டி தன் எக்ஸ் கணக்குப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.

`நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை விரிவானது. முன்னேற்றம் மற்றும் நல்லாட்சிக்கான வரைபடத்தை இந்த உரை முன்வைத்தது. இந்தியா மேற்கொண்டு வரும் முன்னேற்றங்கள் மற்றும் எதிர்காலத்தில் இருக்கும் சாத்தியக்கூறுகளை இந்த உரை உள்ளடக்கியிருந்தது. நம் குடிமக்கள் வாழ்வில் சில தரமான மாற்றங்களைக் கொண்டு வர நாம் கூட்டாகக் கடக்க வேண்டிய சவால்கள் குறித்து அவரது உரையில் குறிப்பிடப்பட்டிருந்தன’ என்று குடியரசுத் தலைவரின் நாடாளுமன்ற உரை குறித்து தன் எக்ஸ் கணக்குப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் மோடி.

`மூன்றாவது முறையாக இந்த அரசு மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த அரசால் மட்டும்தான் தங்களின் லட்சியங்களை நிறைவேற்ற முடியும் என்பது மக்களுக்குத் தெரியும். இந்த 18-வது மக்களவை பலவழிகளிலும் சிறப்பானது. அமிர்த காலத்தின் துவக்கத்தில் இந்த மக்களவை அமைந்துள்ளது’ என்று தன் நாடாளுமன்ற உரையில் குறிப்பிட்டார் குடியரசுத் தலைவர்.

`இது மரபு, எப்போதும் இது நடைபெறுகிறது. நாங்கள் குடியரசுத் தலைவர் பேசுவதைக் கேட்போம். ஆனால் இது அரசின் உரை’ என்று குடியரசுத் தலைவர் உரை குறித்து கருத்து தெரிவித்தார் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ். `குடியரசுத் தலைவர் உரை ஏற்கனவே எழுதப்பட்டது, அதில் பெரிதாக ஒன்றும் இல்லை’ என காங்கிரஸ் எம்.பி இம்ரான் மசூத் நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.