இந்தியா

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை!

2025-2026 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாளை (பிப்.1) மக்களவையில் தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

ராம் அப்பண்ணசாமி

2025-ம் ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் உரையாற்றினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

நடப்பாண்டின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜன.1) தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் உரையாற்ற காலை 11 மணி அளவில் நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் ஆற்றிய உரையில் அவர் கூறியதாவது,

`2 மாதங்களுக்கு முன்பு, இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிகழ்வைக் கொண்டாடினோம். சில தினங்களுக்கு முன்பு இந்தியக் குடியரசு 75 ஆண்டுகளை நிறைவு செய்தது. இந்த நேரத்தில் அரசியல் சாசனத்தை உருவாக்கிய அனைவருக்கும் மரியாதை செலுத்துகிறேன்.

இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தையும், சமூக உணர்வையும் பிரதிபலிக்கும் நிகழ்வே மஹா கும்பமேளா. மஹா கும்பமேளாவில் கூட்ட நெரிசல் காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன்.

சில தினங்களுக்கு முன்பு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை நாம் இழந்துவிட்டோம். நாட்டின் பிரதமராக 10 ஆண்டு காலம் பணியாற்றி, நாடாளுமன்ற உறுப்பினராக மிக நீண்ட காலம் இருந்தவர். அவருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்.

நமது நாட்டில் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளார்கள். மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா மூலம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

விவசாயிகளுக்கு உதவித் தொகையாக ரூ. 41 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. மக்களுக்கு வீட்டு வசதி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு சிறப்பாக செயல்படுத்துகிறது. 2.25 கோடி சொத்து உரிமை அட்டைகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.

ஏழைகளின் கனவுகளை நனவாக்க மத்திய அரசு பாடுபட்டு வருகிறது. மத்திய அரசின் சீரிய நடவடிக்கைகளால் 25 கோடி ஏழை மக்கள் வறுமையின் பிடியில் இருந்து மீண்டுள்ளனர். ஜன் அவ்ஷௌதி கேந்திரா திட்டத்தின் மூலம் 80 சதவீதம் தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்படுகின்றன.

2047-ல் வளர்ந்த பாரதம் என்கிற நமது இலக்கு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதால்தான் வெளிநாடுகளில் இருந்து முதலீடுகள் வருகின்றன.

இந்தியாவில் தயாரிப்போம் என்ற நிலையில் இருந்து, உலகிற்காக தயாரிப்போம் என்பதை நோக்கி நாம் நகர்ந்துள்ளோம். வளர்ச்சி அடைந்த பாரதமாக மாறுவதே ஒரே குறிக்கோள். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக விரைவில் இந்தியா மாறும்’ என்றார்.

இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரையில் இடம்பெற்றிருந்த சில முக்கிய அம்சங்களை ஆங்கிலத்தில் வாசித்தார் துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கர்.