இந்தியா

விஜயகாந்துக்கு பத்ம பூஷண்: குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றுக்கொண்ட பிரேமலதா

கிழக்கு நியூஸ்

விஜயகாந்துக்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து பிரேமலதா விஜயகாந்த் பெற்றுக்கொண்டார்.

2024-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரி 25-ல் அறிவித்தது. மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு கலைத் துறைக்காக பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.

கலைத் துறைக்காக தமிழ்நாட்டிலிருந்து பழம்பெரும் நடிகை வைஜயந்தி மாலாவுக்கும், பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமண்யத்துக்கும் பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவுக்கும் பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கும் கலைத் துறைக்காக பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 22-ல் நடைபெற்ற நிகழ்ச்சியில் 3 பத்ம விபூஷண், 8 பத்ம பூஷண், 55 பத்மஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்.

மீதமுள்ள விருதாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். விஜயகாந்துக்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதை, அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.