இந்தியா

சிக்கிமில் எஸ்கேஎம் வெற்றி!

கிழக்கு நியூஸ்

சிக்கிமில் மொத்தமுள்ள 32 இடங்களில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி 31 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

சிக்கிமில் உள்ள 32 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை காலை முதல் நடைபெற்று வந்தது. இதில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 31 இடங்களில் வெற்றி பெற்று அசுர பலத்துடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. ஒரு இடத்தில் எஸ்டிஎஃப் வெற்றி பெற்றுள்ளது. பாஜக, காங்கிரஸ் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.

இந்தத் தேர்தலில், 2019 வரை 25 ஆண்டுகளாக முதல்வராக இருந்த சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்டிஎஃப்) தலைவர் பவன் குமார் சாம்லிங் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் தோல்வியடைந்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் பிரேம் சிங் தமாங் கூறுகையில், "பவன் குமார் சாம்லிங் 2019-ல் முற்றிலுமாகத் தோல்வியடைந்துவிட்டார். 25 ஆண்டுகளாக அவர்கள் செய்யாத பணியை நாங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்துள்ளோம். இதன் அடிப்படையில் மக்கள் வாக்களித்துள்ளார்கள்" என்றார்.

சிக்கிம் பாஜக தலைவர் டில்லி ராம் தாபா, எஸ்கேஎம் வேட்பாளர் கலா ராயிடம் 2,968 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

2019 சட்டப்பேரவைத் தேர்தலில் 25 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த எஸ்டிஎஃப் ஆட்சியை பிரேம் சிங் தமாங் தலைமையிலான எஸ்கேஎம் முடிவுக்குக் கொண்டு வந்தது. 2019-ல் எஸ்கேஎம் 17 இடங்களில் வெற்றி பெற்றது. எஸ்டிஎஃப் 15 இடங்களில் வெற்றி பெற்றது.