இந்தியா

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்பை நீக்கவில்லை: தர்மேந்திர பிரதான்

இந்திய கல்வி முறையை குப்பை என்று அழைப்பவர்கள் பொய்களைப் பரப்பும் முன்பு உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும்

ராம் அப்பண்ணசாமி

என்சிஇஆர்டி புத்தகங்களிலிருந்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்பு நீக்கப்பட்டுள்ளதாக ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தை வைத்து பொய் அரசியலில் ஈடுபட்டு வருகிறது காங்கிரஸ் என்று குற்றம்சாட்டியுள்ளார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

மத்திய அரசு நிறுவனமான என்சிஇஆர்டி வெளியிடும் சில பாடப் புத்தகங்களிலிருந்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்பு நீக்கப்பட்டதாக கடந்த சில நாட்களாக செய்தி பரவியது. இந்த விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்தன. இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

`இந்தியாவின் வளர்ச்சியையும், கல்வி முறையையும் காங்கிரஸ் எப்போதுமே வெறுத்து வந்துள்ளது. குழந்தைகளின் வருங்காலத்தை வைத்து விளையாடி வருபவர்களும், இந்திய கல்வி முறையை குப்பை என்று அழைப்பவர்களும் பொய்களைப் பரப்பும் முன்பு உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும்’ என்று கருத்து தெரிவித்துள்ளார் தர்மேந்திர பிரதான்.

இது குறித்து, `அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்பு என்சிஇஆர்டி பாடப் புத்தகங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. முதல் முறையாக அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்பு மட்டுமல்லாமல், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், தேசிய கீதம் போன்றவைக்கும் என்சிஇஆர்டி முக்கியத்துவம் அளித்துள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்பு மட்டும்தான் அரசியலமைப்புச் சட்டத்தைப் பிரதிபலிக்கிறது என்பது குறுகிய எண்ணம். தேசிய கல்விக் கொள்கையைப் பின்பற்றி, குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கு மேற்கூறிய அனைத்துக்கும் நாங்கள் சமமான முக்கியத்துவத்தை அளிக்கிறோம்’ என்று எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளது என்சிஇஆர்டி.