காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் `வாக்கு திருட்டு’ குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் கையாளும் விதம் குறித்து ஜன் சுராஜ் நிறுவனரும், பிரபல அரசியல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் இன்று (ஆக. 18) கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரிடம் இருந்து மன்னிப்பு கோருவதற்குப் பதிலாக, அவரால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விரிவான பதிலை வழங்குவதே தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு என்று பிரசாந்த் கிஷோர் வாதிட்டார்.
`தேர்தல் ஆணையத்தின் வார்த்தைகளை ராகுல் காந்தி பின்பற்றவில்லை என்றால், தேர்தல் ஆணையம் என்ன செய்யும்? ராகுல் காந்தியும் தேர்தல் ஆணையமும் ஒருவருக்கொருவர் என்ன சொல்கிறார்கள் என்பது முக்கியமல்ல. எதிர்க்கட்சித் தலைவராக, ராகுல் காந்தி சில பிரச்னைகளை எழுப்பியுள்ளார்,
மேலும் தேர்தல் ஆணையம் அவற்றுக்கு பட்டியலிட்டு பதிலளிக்க வேண்டும். பதில்களை வழங்குவதற்குப் பதிலாக, மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்கள்,’ என்று பிரசாந்த் கிஷோர் கூறியதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் மீது ராகுல் காந்தியின் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கடுமையான மறுப்பை வெளியிட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு இத்தகைய கருத்துக்களை பிரசாந்த கிஷோர் தெரிவித்துள்ளார்.
வாக்கு திருட்டு விவகாரம் குறித்து பல்வேறு கேள்விகளையும், குற்றச்சாட்டுகளையும் ராகுல் காந்தி எழுப்பியுள்ள நிலையில், அவற்றுக்கான ஆதாரத்துடன் பிரமாணப் பத்திரத்தை அவர் சமர்ப்பிக்கவேண்டும் அல்லது பொது மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூறி அவருக்கு ஏழு நாட்கள் அவகாசத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
இரட்டை வாக்களிப்பு மற்றும் தேர்தல் மோசடி தொடர்பான ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை நேற்று (ஆக. 17) நிராகரித்த ஞானேஷ் குமார், குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், அரசியலமைப்பை அவமதிப்பது என்றும் கூறினார்.
மேலும், `வாக்கு திருட்டு’ என்ற சொல் ஜனநாயக அமைப்புகளை குறைத்து மதிப்பிடுவதாகவும், அரசியல் கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக வாக்காளர்களை குறிவைக்க தேர்தல் ஆணையத்தை ஒரு கருவியாக பயன்படுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.