பிஹார் சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்த நிலையில், ஜன் சுராஜ் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் இன்று பிஹாரில் உள்ள பிதிஹர்வா காந்தி ஆசிரமத்தில் மௌன விரதத்தைத் தொடங்கினார்.
பிஹார் சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. அதன் தலைவர் நிதீஷ் குமார், இன்று பிரதமர் மோடி முன்னிலையில் பிஹாரின் முதலமைச்சராக 10-வது முறை பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 26 அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்தத் தேர்தலில் ஆட்சி மாற்றம் கொண்டு வரப்போவதாக அறிவித்த அரசியல் வியூக வல்லுநர் பிரஷாந்த் கிஷோர் தனது ஜன் சுராஜ் கட்சியில் வேட்பாளர்களை நிறுத்திப் போட்டியிட்டார். ஆனால், 238 தொகுதிகளில் ஒன்றில் கூட அக்கட்சி வெற்றி பெறவில்லை. மேலும், 236 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்து, 3.4% வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வியடைந்தது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரஷாந்த் கிஷோர், “பிஹாரின் அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வர விரும்பினோம். ஆனால் எங்களால் ஆட்சி மாற்றத்தைக் கூட கொண்டுவர முடியவில்லை. தேர்தலில் நாங்கள் சந்தித்த தோல்விக்கான முழு பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். அதற்கு பிராயச்சித்தமாக நவம்பர் 20 அன்று காந்தி பிதிஹர்வா ஆசிரமத்தில் ஒரு நாள் மௌன விரதம் அனுசரிக்கிறேன். நாங்கள் எங்கள் கட்சியை சுயபரிசோதனை செய்கிறோம். ஜேடியு 25 தொகுதிகளில் வெற்றி பெற்றால் அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று கூறினேன். இப்போது அமைந்திருக்கும் ஜேடியு ஆட்சி, பிரசாரத்தில் சொன்னதுபோல் மக்களுக்கு ரூ. 2 லட்சம் ஊக்கத்தொகையை கொடுத்துவிட்டால் அரசியலிலிருந்து விலகுகிறேன்” என்று பேசினார்.
இதையடுத்து மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பிதிஹர்வா காந்தி ஆசிரமத்தில் மௌன விரதத்தைத் தொடங்கினார். முன்னதாக அங்கிருந்த காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். கடந்த 2023-ல் இதே ஆசிரமத்தில் இருந்துதான் ஆட்சிக்கு எதிரான நடைபயணத்தை பிரஷாந்த் கிஷோர் தொடங்கினார்.
Jan Suraaj Party’s poor performance in the recent Bihar assembly polls, political strategist-turned-activist Prashant Kishor on Monday began a day-long silent fast.