தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, பிஹார் மாநில இடைத்தேர்தலில் போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது.
பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரும், அரசியல் கட்சிகளின் ஆலோசகராக விளங்கியவருமான பிரசாந்த் கிஷோர் கடந்த அக்.2-ல் ஜன் சுராஜ் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். பீஹார் மாநிலத்தில் அரசியல் மாற்றத்தைக் கொண்டுவரும் வகையில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்தார்.
இந்நிலையில், பீஹார் மாநிலத்தில் காலியாக உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை கடந்த அக்.15-ல் வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம். இதன்படி டராரி, ராம்கர், இமாம்கஞ்ச், பெலாகஞ்ச் ஆகிய 4 தொகுதிகளுக்கும் கடந்த நவ.13-ல் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த 4 தொகுதிகளிலும் ஜன் சுராஜ் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.
நேற்று (நவ.23) நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஜன் சுராஜ் கட்சி சார்பில் டராரி தொகுதியில் போட்டியிட்ட கிரண் சிங் 5,622 வாக்குகளும், ராம்கர் தொகுதியில் போட்டியிட்ட சுஷில் குமார் சிங் 6,513 வாக்குகளும், இமாம்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட ஜிதேந்திர பஸ்வான் 37,103 வாக்குகளும், பெலாகஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட மொஹமத் அமாஜத் 17,285 வாக்குகளும் பெற்று தோல்வியடைந்தனர்.
மேற்கூறிய நான்கு வேட்பாளர்களில் ஜிதேந்திர பஸ்வான் மற்றும் மொஹமத் அமாஜத் மட்டுமே டெபாசிட் பெற்றனர். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரின் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தோல்வி அடைந்தது பேசுபெருளாகியுள்ளது.