கும்பமேளா நடைபெற்று வரும் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கம நீர் குடிப்பதற்கு உகந்தது என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசிய நிலையில், அந்த நீரைக் குடிக்குமாறு அவருக்கு சவால் விடுத்துள்ளார் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண்.
பிரயாக்ராஜில் பாயும் கங்கை, யமுனை நதிகளில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்கக்கோரி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. பிரயாக்ராஜ் திரிவேணி சங்கம நீரில் உள்ள மாசுபாடு அளவு குறித்து, வழக்கு விசாரணையின்போது மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்தது.
திரிவேணி சங்கமம் மற்றும் அருகிலிருக்கும் பிற பகுதிகளில் உள்ள நீரில், அளவுக்கு அதிகமாக ஃபீக்கல் கோலிஃபார்ம் பாக்டீரியா இருப்பதால், அப்பகுதிகள் குளிப்பதற்கு தகுதியற்றவையாக மாறிவிட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை முன்வைத்து சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜக அரசுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்தன.
இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக நேற்று (பிப்.19) உ.பி. சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரயாக்ராஜ் திரிவேணி சங்கம நீர் புனித நீராடுவதற்கும், குடிப்பதற்கும் உகந்தது என்றும், மஹா கும்பமேளாவிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அறிக்கையை முன்வைத்து எதிர்க்கட்சிகள் போலியாகப் பிரச்சாரம் செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் வெளியிட்ட பதிவில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த பூஷண் கூறியதாவது,
`பொதுவெளியில் வைத்து, கும்பமேளாவின் திரிவேணி சங்கம நீரை ஒரு குவளை குடிக்குமாறு யோகி ஆதித்யநாத் மற்றும் அவரது அமைச்சரவைக்கு நான் சவால்விடுகிறேன்’ என்றார்.