பாலியல் வன்கொடுமை வழக்கில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்.பி.யும், முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் பேரனுமான பிரஜ்வால் ரேவண்ணாவை குற்றவாளி என்று எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இன்று (ஆக. 1) தீர்ப்பு வழங்கியது.
வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை குறிப்பிடத்தக்க வேகத்தில் நடந்து, 14 மாதங்களுக்குப் பிறகு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரஜ்வால் ரேவண்ணாவுக்கான தண்டனை விவரங்களை சிறப்பு நீதிமன்றம் நாளை (ஆகஸ்ட் 2) வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தீர்ப்பு வெளியானதும் உணர்ச்சிவசப்பட்ட ரேவண்ணா, கண்ணீர் விட்டு அழுதபடி சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினார்.
கர்நாடகத்தின் மைசூரூவில் உள்ள கே.ஆர். நகரைச் சேர்ந்த வீட்டு வேலை செய்யும் பெண் ஒருவரால் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பிரஜ்வால் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்தப் பெண்ணை ரேவண்ணா இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோவில் பதிவு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டம், 2008-ன் கீழ் பல்வேறு பிரிவுகளில் பிரஜ்வால் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையின்போது, பாதுகாத்து வைத்திருந்த சேலையை பாதிக்கப்பட்ட பெண் ஆதாரமாக சமர்ப்பித்தார். தடயவியல் பகுப்பாய்வின்போது சேலையில் விந்தணு இருப்பது உறுதி செய்யப்பட்டு, பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெற்றதை நிறுவுவதற்கான முக்கிய ஆதாரமாக அது நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
காவல் ஆய்வாளர் ஷோபா தலைமையிலான சிஐடியின் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி), விசாரணையின்போது 123 ஆதாரங்களைச் சேகரித்து கிட்டத்தட்ட 2,000 பக்கங்களைக்கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை கடந்த டிசம்பர் 31, 2024 அன்று சிறப்பு நீதிமன்றத்தில் தொடங்கியது. அடுத்த 7 மாதங்களில், 23 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.