நாடு தழுவிய அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பை 2027-ல் மத்திய அரசு நடத்தும் என்றும், முதல்முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக சாதிவாரி கணக்கெடுப்பும் நடைபெறும் என்றும், இன்று (ஜூன் 4) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அறிவிக்கையில், மக்கள்தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 1, 2027 அன்று மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர், லடாக், ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் உள்ளிட்ட பனிப்பொழிவு ஏற்படும் பகுதிகளுக்கு, மக்கள்தொகை கணக்கெடுப்பு முன்னதாகவே தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. அக்டோபர் 1, 2026 அன்று இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கணக்கெடுப்பு தொடங்கும்.
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்புடன் நடத்துவதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிக்கை ஜூன் 16, 2025 அன்று இந்திய அரசிதழில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறைவுபெற்ற பிறகு, மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புப் பணிகள் தொடங்கும்.
கடைசியாக கடந்த 2011-ல் இரண்டு கட்டங்களாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது. இதன்மூலம் இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடி என்று அறிவிக்கப்பட்டது. 2001 மக்கள் தொகையை ஒப்பிடும்போது, நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 17.7% ஆக இருந்ததாக அறிவிக்கப்பட்டது.
வழக்கமாக 10 வருடங்களுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெறும். 2020 மற்றும் 2021-ல் ஏற்பட்ட கோவிட் பெருந்தொற்று அலையால் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடைபெறவில்லை.