ANI
இந்தியா

கோவேக்சின் குறித்த ஆய்வு தவறானது: ஐசிஎம்ஆர்

கிழக்கு நியூஸ்

கோவேக்சின் தடுப்பூசி குறித்து பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஆய்வு தவறான முறையில் நடத்தப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் குற்றம்சாட்டியுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட்டுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் கரோனா தடுப்பூசியைத் தயாரித்தது.

கோவேக்சின் தடுப்பூசி குறித்து பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின் முடிவில் கோவேக்சின் தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்களுக்கு தீவிரமான பக்க விளைவுகள் நிறைய ஏற்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டது.

ஜனவரி 2022, ஆகஸ்ட் 2023 காலகட்டத்தில் கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 926 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் 30 சதவீதத்தினருக்கும் மேற்பட்டவர்களுக்கு நரம்பியல் பிரச்னை, எலும்பு மற்றும் தசைப் பிரச்னைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. 50 சதவீதத்தினருக்கும் மேலானவர்களுக்கு நுரையீரல் தொற்று புகார் இருந்துள்ளது.

இந்த நிலையில், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வு முறை தவறானது என்றும், இந்த ஆய்வுக்குத் தங்களிடமிருந்து முறையான ஒப்புதல் எதையும் பெறவில்லை என்றும் ஐசிஎம்ஆர் விளக்கமளித்துள்ளது.

ஆய்வு குறித்து பல்வேறு விமர்சனங்களை வைத்துள்ள ஐசிஎம்ஆர் இயக்குநர், தரவுகளை சேகரித்த விதத்தைக் கடுமையாக சாடியுள்ளார். கோவேக்சின் தடுப்பூசி செலுத்தியவர்களிடம் தொலைபேசி வாயிலாகவே தகவல்கள் சேகரித்ததையும், அவர்களுடைய பதில்கள் மருத்துவர்களால் சரிபார்க்கப்படாதது மற்றும் மருத்துவக் குறிப்புகளைக் கொண்டு சரிபார்க்கப்படாததையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்த ஆய்வுக்கும் ஐசிஎம்ஆருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் ஆய்வுக்குத் தொழில்நுட்ப ரீதியிலோ, பொருளாதார ரீதியிலோ எந்தவொரு உதவியையும் ஐசிஎம்ஆர் வழங்கவில்லை என்றும் ஐசிஎம்ஆர் இயக்குநர் விளக்கமளித்துள்ளார்.

ஐசிஎம்ஆர் பெயரை ஆய்விலிருந்து நீக்க வேண்டும் என்றும், ஆய்வு முறையில் சுட்டிக்காட்டியுள்ள தவறுகளைச் சரி செய்ய வேண்டும் என்றும் ஐசிஎம்ஆர் இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார். இல்லாதபட்சத்தில் சட்டம் மற்றும் நிர்வாக ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஐசிஎம்ஆர் இயக்குநர் ராஜீவ் பால் தெரிவித்துள்ளார்.