இந்தியா

சர்ச்சைக்குள்ளான ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் பயிற்சி நிறுத்திவைப்பு

ராம் அப்பண்ணசாமி

மராட்டியத்தில் சர்ச்சையில் சிக்கிய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் பயிற்சி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மாவட்ட பயிற்சி திட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார் பூஜா. வரும் 23-க்குள் ஐஏஎஸ் பயிற்சி மையத்துக்கு திரும்ப பூஜாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2022-ல் அகில இந்திய குடிமை பணி தேர்வில் 841-வது ரேங்க் பெற்ற பூஜா கேத்கருக்கு ஐஏஎஸ் பணி ஒதுக்கப்பட்டது. ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் முதல்கட்ட பயிற்சி முடிந்ததும் மராட்டிய மாநிலத்தில் பணியமர்த்தப்பட்டார் பூஜா.

புனேவில் பயிற்சி அதிகாரியாக இருந்த பூஜா எந்த ஒரு முன் அனுமதியும் இன்றி தனக்குச் சொந்தமான ஆடி காரில் சிவப்பு-நீல நிற லைட்டையும், மராட்டிய அரசு என்ற பெயர் பலகையும் உபயோகித்து வந்துள்ளார். மேலும் தான் பணியாற்றும் அரசு அலுவலகத்தில் தனக்கென தனி அறையை அவர் கேட்டுள்ளார்.

பயிற்சி அதிகாரிகளுக்கான சலுகைகளைத் தாண்டி இவ்வாறு வேறு பல சலுகைகளை அவர் பெற முயற்சித்ததால் சர்ச்சை எழுந்தது. இதை அடுத்து புனேவிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு வாஷிம் மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்டார் பூஜா.

மேலும் அகில இந்திய குடிமை பணி தேர்வை எழுத ஓபிசி சான்றிதழையும், மாற்றுத் திறனாளி சான்றிதழையும் சமர்பித்துள்ளார் பூஜா. ஆனால் பூஜா கேத்கரின் தந்தை திலீப் கேத்கர் ஓய்வு பெற்ற மாநில அரசு அதிகாரியாவார். அது மட்டுமல்லாமல் தேர்தலில் போட்டியிடும்போது தன் சொத்து மதிப்பு ரூ. 40 கோடி என்று குறிப்பிட்டிருந்தார் பூஜாவின் தந்தை.

ஓபிசி பிரிவின் கீழ் இடஒதுக்கீடு பெற ஒரு தேர்வரின் பெற்றோருக்கான ஆண்டு வருமானம் 8 லட்சத்துக்கும் மிகாமல் இருக்க வேண்டும். இதனால் பூஜா தன் பெற்றோரின் உண்மையான ஆண்டு வருமானத்தை மறைத்துள்ளார், மாற்றுத் திறனாளி சான்றிதழையும் சட்டவிரோதமாகப் பெற்றுள்ளார் என்று சர்ச்சை கிளப்பப்பட்டது.

இதனை அடுத்து இன்று (ஜூலை 16) மராட்டிய மாநில அரசால் மாவட்ட பயிற்சியில் இருந்து விடுவிக்கப்பட்டார் பூஜா. மேலும் ஜூலை 23-க்குள் ஐஏஎஸ் பயிற்சி மையத்துக்குத் திரும்ப பூஜாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.