இந்தியா

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை

பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருவதால், நிதி முறைகேடு வழக்கையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றியது உயர் நீதிமன்றம்

ராம் அப்பண்ணசாமி

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரியின் முன்னாள் டீன் சந்திப் கோஷ், நீதிமன்றக் காவலில் உள்ள சஞ்சய் ராய் ஆகியோரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தில்லி மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தின் நிபுணர்கள் இன்று (ஆகஸ்ட் 24) கொல்கத்தாவுக்குச் சென்றுள்ளனர்.

இதைத் தொடர்ந்து 14 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டு சிறையில் உள்ள சஞ்சய் ராயிடம் சிறையிலும், முன்னாள் டீன் சந்திப் கோஷ் உள்ளிட்ட 4 மருத்துவர்களுக்கு கொல்கத்தா சிபிஐ அலுவலகத்திலும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அரசு ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரியில் நடந்த நிதி தொடர்பான முறைகேடுகளில், அதன் முன்னாள் டீன் சந்தீப் கோஷ் தொடர்புடைய வழக்கை கொல்கத்தா காவல்துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வந்தது.

இந்த வழக்கை நேற்று சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது கொல்கத்தா உயர் நீதிமன்றம். பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருவதால், நிதி முறைகேடு வழக்கையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றியது உயர் நீதிமன்றம். இந்த வழக்கு விசாரணை தொடர்பான அறிக்கையை மூன்று வார கால அவகாசத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிஐ-க்கு உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்.

நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து இன்று காலை முன்னாள் டீன் சந்தீப் கோஷ் தொடர்புடைய நிதி முறைகேடு வழக்கு சம்மந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் சிபிஐ வசம் ஒப்படைத்தது சிறப்புப் புலனாய்வுக் குழு.

கடந்த ஆகஸ்ட் 20-ல் நடந்த வழக்கு விசாரணையின்போது ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையை பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.