ANI
இந்தியா

பிஹாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர் விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் ஒப்புதல்! | Election Commission

வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நபர்கள், ஆதார் அட்டையின் நகலுடன் தங்களது கோரிக்கைகளை சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.

ராம் அப்பண்ணசாமி

பிஹாரில் அண்மையில் முடிவடைந்த சிறப்பு தீவிர திருத்த (SIR) நடவடிக்கையின் ஒரு பகுதியாக தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வரைவுப் பட்டியலில் இடம்பெறாமல் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை பூத் வாரியாக வெளியிட ஒப்புக்கொள்வதாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று (ஆக. 14) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பிஹார் மாநில வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்ட வாக்காளர்களின் பெயர்களை மாவட்ட வாரியான பட்டியலாக வெளியிடவும், அவர்கள் நீக்கப்பட்டதற்கான காரணங்களைக் குறிப்பிடவும் உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 65 லட்சம் வாக்காளர்களின் பூத் வாரியான பட்டியலை ஒவ்வொரு பூத் நிலை அதிகாரியும் சம்மந்தப்பட்ட அலுவலகங்களிலும், ஊராட்சி ஒன்றிய/கிராம ஊராட்சி அலுவலகங்களில் உள்ள அறிவிப்புப் பலகையிலும் காட்சிப்படுத்தவேண்டும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நபர்கள், ஆதார் அட்டையின் நகலுடன் தங்களது கோரிக்கைகளை சம்மந்தப்பட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, இந்தத் தகவலை ஒவ்வொரு செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றில் விளம்பரங்கள் மூலம் தேர்தல் ஆணையம் வெளியிடவுள்ளது.

இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் அடுத்த செவ்வாய்க்கிழமைக்குள் (ஆக. 19) மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாக்காளர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நேற்று (ஆக. 13) நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.