மத்திய பட்ஜெட்: அரசியல் தலைவர்களின் கருத்து 
இந்தியா

மத்திய பட்ஜெட்: அரசியல் தலைவர்களின் கருத்து | Union Budget 2026 - 27 |

2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கிய வலுவான அடித்தளமாக நிதிநிலை அறிக்கை...

கிழக்கு நியூஸ்

நாடாளுமன்றத்தில் மத்திய நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துகளைப் பார்க்கலாம்.

2026 - 27 நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். தொடர்ந்து 9-வது முறையாக மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு முக்கிய அம்சங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதற்கிடையில் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை குறித்து அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.

பிரதமர் மோடி புகழாரம்

நிதிநிலை அறிக்கை குறித்த தனது கருத்துகளைப் பகிர்ந்து பிரதமர் மோடி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கிய வலுவான அடித்தளமாக நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. மாற்றத்திற்கான பணிகளுக்கு இந்த நிதிநிலை அறிக்கை புதிய ஆற்றலையும் வேகத்தையும் கொடுக்கும். தனித்துவம் மிக்க இந்த நிதிநிலை அறிக்கை நிதிப்பற்றாக்குறையைக் குறைத்து, பண வீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் கவனம் செலுத்துகிறது. அதிக மூலாதனச் செலவு மற்றும் வளர்ச்சியை உள்ளடக்கியதாக உள்ளது. இந்த நிதிநிலை அறிக்கை இந்தியாவின் உலகளாவிய பங்கை மேலும் வலுப்படுத்துகிறது. உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாற வேண்டும் என்ற 140 கோடி மக்களின் உறுதியை நிதிநிலை அறிக்கை பிரதிபலிக்கிறது. சமீபத்தில் இந்தியாவுக்கு ஐரோப்பிய யூனியனுக்கும் இடையில் கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தத்தின் அதிகபட்ச பலன்கள், நாட்டின் இளைஞர்களுக்கும், சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கும் சென்றடைய வேண்டும். அதை நோக்கிய முக்கிய நடவடிக்கைகள் நிதிநிலை அறிக்கையில் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த நிதிநிலை அறிக்கை சுயசார்பு இந்தியா மற்றும் மேக் இன் இந்தியா திட்டங்களுக்கு புதிய வேகத்தை அளிப்பதற்கான நம்பகமான செயல் திட்டத்தை வகுத்துள்ளது” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

ராகுல் காந்தி அதிருப்தி

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் முக்கிய தலைவருமான ராகுல் காந்தி நிதிநிலை அறிக்கை குறித்து தனது சமூக ஊடகப் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “வேலையில்லா இளைஞர்கள், சரிவடையும் உற்பத்தித் துறை, மூலதனத்தைத் திரும்பப் பெறும் முதலீட்டாளர்கள், பாதாளத்திற்குத் தள்ளப்பட்ட வீட்டு சேமிப்புகள், துன்பத்தில் தவிக்கும் விவசாயிகள், எதிர்காலத்தில் வரவுள்ள சர்வதேச அதிர்ச்சிகள் போன்ற அனைத்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. நாட்டின் உண்மையான நெருக்கடிகளை மறைத்து, அதற்கான திருத்தங்களைச் செய்ய மறுக்கும் நிதிநிலை அறிக்கை இது” என்று விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டை மறந்த நிதிநிலை அறிக்கை

நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி, நிதிநிலை அறிக்கை குறித்து வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: “மாற்றம் இல்லாத ஏமாற்றம். வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் கூட நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை நினைவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை மத்திய அரசுக்கு உணர்த்தவில்லை” என்று கூறியுள்ளார். தொடர்ந்து தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி, “நிதிநிலை அறிக்கையில் ஏமாற்றத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. திருக்குறளும் இல்லை. தமிழ்நாட்டிற்கான எந்தத் திட்டங்களும் இல்லை. தமிழ்நாட்டில் யாருக்குமே சரியான திட்டங்கள் இல்லாமல், செயற்கை நுண்ணறிவு நிதிநிலை அறிக்கையாகவே உள்ளது. விவசாயத்தைப் பற்றி அதிகம் பேசவேயில்லை. மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு கோரிக்கையைக் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளாமல் மாநிலங்களுக்கு அநீதியை இழைத்திருக்கிறது. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிதி குறித்து எந்தவித தெளிவும் இல்லாத நிதிநிலை அறிக்கையாக உள்ளது. தமிழ்நாட்டின் கனிம வளங்களைச் சுரண்டும் வகையில் திட்டங்கள் உள்ளன” என்று கூறினார்.

மக்கள் விரோத பட்ஜெட்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை நிதிநிலை அறிக்கையை விடுமுறை நாளில் தாக்கல் செய்யப்பட்டதைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

”நிதிநிலை அறிக்கையை சம்பிரதாய நடைமுறைகளை மீறி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்திருக்கிறார். தனது 83 நிமிட உரையில் ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஆனால் நாட்டில் நிலவுகிற வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகளின் வருமானத்தை கூட்டுவது, விலைவாசிகளை கட்டுப்படுத்துவது, சிறு, குறு தொழில்களுக்கு ஊக்கம் தருகிற வகையில் எந்த விதமான அறிவிப்பும் வரவில்லை. அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பின் படி இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிற பொருட்களுக்கு 50% வரிவிதிப்பில் இருந்து நாட்டில் உள்ள தொழில்களை எப்படி பாதுகாக்க போகிறார் என்பதற்கான எந்த விதமான அறிவிப்பும் இல்லை. நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள் பயனடைந்த வகையில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் எதையும் அறிவிப்பில் காண முடியவில்லை. இந்தியாவில் 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டு விட்டதாக நிர்மலா சீதாராமன் உரையில் கூறியிருக்கிறார். ஆனால் நம்பகத்தகுந்த சர்வதேச நிறுவனங்கள் வெளியிட்ட வறுமை குறியீடு தரவரிசை பட்டியலில் இந்தியா 109 வது இடத்தில் இருக்கிறது. இந்த பின்னணியில் நிர்மலா சீதாராமன் அறிக்கை என்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. 16 வது நிதிக்குழு அறிக்கையை ஏற்றுக்கொண்டதாக நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார். இதில் மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு 50% ஆக உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டது. ஆனால் 41% ஆக அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது. மக்களை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்லுகிற உருப்படியான திட்டங்களோ, நிதி ஒதுக்கீடோ இல்லாத ஒரு மக்கள் விரோத பட்ஜெட்டாக தான் இது அமைந்திருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.