படம்: https://x.com/narendramodi
இந்தியா

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இல்லத்தில் பிரதமர் மோடி: வலுக்கும் எதிர்ப்புகள்

"அரசியலமைப்பைப் பாதுகாக்க வேண்டியவர்கள் அரசியல் தலைவர்களைச் சந்திக்கும்போது.."

கிழக்கு நியூஸ்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டது விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். விநாயகருக்கு பிரதமர் மோடி ஆரத்தி எடுக்க, தலைமை நீதிபதி சந்திரசூட் அருகிலிருந்து வழிபட்டார். இது தொடர்புடைய புகைப்படங்கள் மற்றும காணொளி நேற்று வெளியாகின.

இதைத் தொடர்ந்து, நீதித் துறையின் வெளிப்படைத்தன்மையைக் குறிப்பிட்டு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

உத்தவ் தாக்கரே ஆதரவு சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் கூறியதாவது:

"உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இல்லத்துக்கு பிரதமர் சென்றுள்ளார். இருவரும் இணைந்து ஆரத்தி எடுத்து வழிபடுகிறார்கள். அரசியலமைப்பைப் பாதுகாக்க வேண்டியவர்கள் அரசியல் தலைவர்களைச் சந்திக்கும்போது அது சந்தேகத்தை எழுப்புகிறது.

தற்போதைய மத்திய அரசுக்குத் தொடர்புள்ள எங்களுடைய மஹாராஷ்டிர வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் முன்பு விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கில் பிரதமரும் ஓர் அங்கம். எங்களுக்கு நீதி கிடைக்குமா என்கிற கவலை தற்போது எழுந்துள்ளது. இந்த வழக்கிலிருந்து விலகுவது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பரிசீலனை செய்ய வேண்டும்" என்றார் அவர்.

உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் எக்ஸ் தளப் பக்கத்தில் கூறியதாவது:

"உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், மோடியை தனிப்பட்ட சந்திப்புக்காக தன் வீட்டுக்குள் அனுமதித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நீதித் துறைக்கு இது மிகத் தவறான சமிக்ஞையை அனுப்புகிறது. அரசு நிர்வாகத்திடமிருந்து குடிமக்களின் அடிப்படை உரிமையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் அரசாங்கம் அரசியலமைப்புச் சட்டத்துக்குள்பட்டு அரசு செயல்படுவதை உறுதி செய்யும் பொறுப்பும் நீதித் துறையிடம் உள்ளது. எனவே தான் அரசு நிர்வாகம் மற்றும் நீதித் துறை இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான இந்தியா ஜெய் சிங் கூறியதாவது:

"அரசு நிர்வாகம் மற்றும் நீதித் துறை இடையிலான அதிகார இடைவெளியை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சமரசம் செய்துகொண்டார். சுயாதீனமாகச் செயல்படும் அனைத்து நம்பிக்கையையும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இழந்துவிட்டார்" என்றார் அவர்.