இந்தியா

வருமான வரி விலக்கு, ஜிஎஸ்டி குறைப்பால் 2.5 லட்சம் கோடி சேமிக்க முடியும்: பிரதமர் மோடி உரை! | Modi Speech | GST reforms

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு வாழ்த்துகளுடன் உரையைத் தொடங்கினார்.

கிழக்கு நியூஸ்

இந்தியாவில் 5%, 12%, 18%, 28% என நான்கு அடுக்குகளாக வசூலிக்கப்பட்டு வந்த ஜிஎஸ்டி வரி, 5% மற்றும் 18% என இரு அடுக்குகளாகக் குறைக்கப்பட்டுள்ளன. உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும், ஆடம்பர பொருள்களுக்குப் புதிதாக 40 சதவீதம் வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் இன்று உரையாற்றினார். நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு வாழ்த்துகளுடன் உரையைத் தொடங்கினார்.

பிரதமர் பேசியதாவது:

"நாளை முதல் நவராத்திரி பண்டிகை தொடங்குகிறது. அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நவராத்திரி முதல் நாளிலிருந்து சுயசார்பு இந்தியாவை நோக்கிய முக்கிய அடியை இந்தியா எடுத்து வைக்கிறது. நவராத்திரியின் முதல் நாளான நாளை முதல் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமலுக்கு வருகிறது.

நாளை முதல் இந்தியாவில் ஜிஎஸ்டி சேமிப்புத் திருவிழா தொடங்குகிறது. உங்களுடைய சேமிப்புகள் அதிகரிக்கவுள்ளன. உங்களுக்குப் பிடித்தமான பொருள்களை உங்களால் வாங்க முடியும். ஜிஎஸ்டி சேமிப்புத் திருவிழா ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், விவசாயிகள், வணிகர்கள், தொழில்முனைவோர்கள் என சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் பலனைத் தரும்.

இந்த சீர்திருத்தம் நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்தும். வணிகத்தை எளிதாக்கும். முதலீடுகளை மேலும் ஈர்க்கும். வளர்ச்சிக்கானப் போட்டியில் எல்லா மாநிலங்களையும் சம கூட்டாளியாக மாற்றும்.

பழைய வரலாறைத் திருத்தி புதிய வரலாறை எழுதுவதற்கானத் தொடக்கமாக 2017-ல் ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமைந்தது. அதற்கு முன்பு வரை பல 10 ஆண்டுகளாக நுழைவு வரி, விற்பனை வரி, மதிப்புக் கூட்டு வரி, கலால் வரி எனப் பல்வேறு வரிகளை நாட்டு மக்களும் வணிகர்களும் செலுத்தி வந்தார்கள்.

2014-ல் பிரதமர் பொறுப்பு என்னிடம் வழங்கப்பட்டபோது, அதன் தொடக்க காலத்தில் ஒரு வெளிநாட்டு நாளிதழில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது. ஒரு நிறுவனத்தின் இன்னல்களை அது வகுத்திருந்தது.

பெங்களூருவிலிருந்து ஹைதராபாதுக்கு சரக்குகளை அனுப்புவது மிகக் கடினம் என அந்நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. பெங்களூரு மற்றும் ஹைதராபாத் இடையிலான தூரம் 570 கி.மீ. இதன் காரணமாக, பொருள்களை முதலில் பெங்களூருவிலிருந்து ஐரோப்பாவுக்கு அனுப்பிவிட்டு, அதே சரக்கை மீண்டும் ஐரோப்பாவிலிருந்து ஹைதராபாதுக்கு அனுப்புவதை அந்நிறுவனம் விரும்பியது.

அந்த காலத்தில் வரிகள் மற்றும் சுங்கக் கட்டணத்தில் இத்தனை சிக்கல்கள் இருந்தன. வரி குழப்பங்களால் இதுபோன்ற லட்சக்கணக்கான நிறுவனங்கள், நாட்டு மக்களுடன் இணைந்து பல அன்றாடப் பிரச்னைகளை எதிர்கொண்டார்கள். ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்துக்குப் பொருள்களைக் கொண்டு செல்வதில் அதிகரித்த செலவுகள் ஏழைகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. உங்களைப் போன்ற வாடிக்கையாளர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்பட்டது.

2014-ல் நீங்கள் எனக்கு வாய்ப்பளித்தபோது, பொதுநலன் மற்றும் நாட்டு நலனில் ஜிஎஸ்டியே எங்களுடைய முதன்மையானதாக இருந்தது. எல்லோரிடமும் ஆலோசனை நடத்தினோம். மாநிலங்களுடைய சந்தேகங்களைத் தீர்த்து வைத்தோம். மாநிலங்களின் கேள்விகளுக்குத் தீர்வு கண்டோம்.

அனைத்து மாநிலங்களையும் உள்ளே கொண்டு வந்ததால் தான், நாட்டின் மிகப் பெரிய வரி சீர்திருத்தம் சாத்தியமானது. மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகளின் விளைவு தான் இந்த சீர்திருத்தம். பல்வேறு வரிகள் மற்றும் நாடு முழுவதுக்குமான ஒற்றை அமைப்பு முறையிலிருந்து ஒட்டுமொத்த நாடு விடுதலை பெற்றது. ஒரே நாடு, ஒரே வரி எனும் கனவு நனவானது.

கடந்த 11 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து விடுபட்டுள்ளார்கள். வறுமையிலிருந்து விடுபட்ட 25 கோடி மக்கள், புதிய நடுத்தர வர்க்கத்தினராக அழைக்கப்படுகிறார்கள். நாட்டில் இவர்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள். இவர்களுக்கென்று தனி கனவுகளும் லட்சியங்களும் உள்ளன.

வருமான வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிப்பதற்கான உச்ச வரம்பை ரூ. 12 லட்சமாக உயர்த்தி அரசாங்கம் அவர்களுக்குப் பரிசளித்தது. இது நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும். தற்போது ஏழைகள், புதிய நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் இரட்டைப் பரிசைப் பெறுகிறார்கள். ஜிஎஸ்டி வரி விகிதம் குறைவதன் மூலம், நாட்டு மக்களுக்கு தங்களுடைய கனவுகளை நனவாக்குவது எளிதாகும்.

வருமான வரி விலக்கு மற்றும் ஜிஎஸ்டி வரி குறைப்பால் ரூ. 2.5 லட்சம் கோடி அளவுக்கு சேமிக்க முடியும். அதனால் தான் சொல்கிறேன், இது சேமிப்புத் திருவிழா என்று.

சீர்திருத்தம் என்பது தொடர்ச்சியான நடைமுறை. காலத்தின் மாற்றத்துக்கு ஏற்ப, நாட்டின் தேவையும் மாறுகிறது. எனவே, அடுத்த தலைமுறை சீர்திருத்தமும் அவசியமாகிறது. நாட்டின் தற்போதைய தேவை மற்றும் எதிர்கால கனவுகளை மனதில் கொண்டே புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

புதிய வரி விகிதத்தில் 5% மற்றும் 18% என இரு அடுக்குகள் மட்டுமே. இதன்மூலம், அன்றாடப் பயன்படுத்தும் பொருள்களின் விலை குறையும். உணவுப் பொருள்கள், மருந்துகள், சோப்புகள், பிரஷ், பேஸ்ட், சுகாதாரக் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு போன்றவை ஜிஎஸ்டியிலிருந்து விடுபடும் அல்லது 5% வரி செலுத்த வேண்டும். முன்பு 12% வரி வசூலிக்கப்பட்டு வந்த பொருள்களில் 99 சதவீதப் பொருள்கள் தற்போது 5%-ன் கீழ் வருகின்றன.

வளர்ச்சியடைந்த இந்தியா எனும் இலக்கை அடைய, நாம் சுயசார்புப் பாதயில் நடக்க வேண்டும். இந்தியாவைச் சுயசார்பு இந்தியாவாக மாற்றுவதற்கான மிகப் பெரிய பொறுப்பு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினரைச் சார்ந்து உள்ளது. நாட்டு மக்களுக்கு என்ன தேவையோ, நம் நாட்டில் எதைத் தயாரிக்க முடியுமோ, அதை நம் நாட்டிலேயே நாம் தயாரிக்க வேண்டும். ஜிஎஸ்டி வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது மற்றும் விதிகள், நடைமுறைகளை எளிமையாக்கியிருப்பது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில், சிறு தொழில்கள் மற்றும் குடிசைத் தொழில்களுக்குப் பெரிய அளவில் பலனளிக்கும். இவர்களுடைய வியாபாரம் அதிகரிக்கும். இவர்கள் குறைவான வரியைச் செலுத்தினாலே போதும். இதன் அர்த்தம் என்னவெனில், இவர்களுக்கு இரட்டைப் பலன்கள் கிடைக்கின்றன. சுதேசி என்ற முழக்கம் நமது சுதந்திர இயக்கத்திற்கு வலிமை சேர்த்தது. இன்று, அதே சுதேசி முழக்கம் நமது செழுமைக்கானத் தேடலை வலுப்படுத்தும்.

இன்று தெரிந்தோ, தெரியாமலோ பல வெளிநாட்டுப் பொருள்கள் நம் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களையே நாம் வாங்க வேண்டும். இதன்மூலம், நம் நாட்டு இளைஞர்களின் கடின உழைப்பு முதலீடு செய்யப்படுகிறது. எல்லா வீடுகளையும் சுதேசியின் அடையாளமாக மாற்ற வேண்டும், கடைகள் அனைத்தும் சுதேசியால் அலங்கரிக்க வேண்டும்.

சுயசார்பு இந்தியா மற்றும் சுதேசி இயக்கத்தில் அனைத்து மாநிலங்களும் இணைய வேண்டும் என வலியுறுத்துகிறேன். மாநிலங்களில் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் முதலீட்டுக்கான சூழல்களை உருவாக்கலாம். நாடும், மாநிலங்களும் இணைந்து செயல்பட்டால், சுயசார்பு இந்தியா எனும் கனவு நனவாகும்" என்றார் பிரதமர் மோடி.

GST | GST Reforms | PM Modi | PM Modi Speech | Narendra Modi |