https://x.com/kharge
இந்தியா

பிரதமரின் மணிப்பூர் பயணம் வெறும் நாடகம்: மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் | Mallikarjun Kharge | Modi |

பிரதமர் மோடி அடிக்கடி குறிப்பிடும் ராஜ தர்மம் எங்கே போனது என்றும் கேள்வி...

கிழக்கு நியூஸ்

பிரதமர் மோடியின் மணிப்பூர் பயணம் வெறும் நாடகம். வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.

மணிப்பூரில் ரூ. 8,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முன்னதாக மணிப்பூரில் கடந்த 2023-ல் இனக்கலவரம் ஏற்பட்டது. அப்போது அங்கு பிரதமர் ஏன் பார்வையிடவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தன. ஆனால் பிரதமர் தொடர்ந்து மௌனம் காத்தார். இதையடுத்து, இன்று (செப். 13) மணிப்பூர் சென்று மக்களைச் சந்தித்துப் பிரதமர் உரையாடினார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் மணிப்பூர் பயணத்தைக் கடுமையாக விமர்சித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதிவிட்டுள்ளார். எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது :

“பிரதமர் மோடி அவர்களே! மணிப்பூரில் நீங்கள் மூன்று மணி நேரம் மட்டுமே தங்கியது, இரக்கமல்ல. ஒரு நாடகம். பெயரளவிலான செயல் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட கடுமையான அவமானம்.

864 நாட்கள் வன்முறை: சுமார் 300 உயிர்கள் பலி, 67,000 பேர் இடம்பெயர்ந்தனர், 1,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதற்கிடையில், நீங்கள் 46 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளீர்கள், ஆனால் உங்கள் சொந்தக் குடிமக்களுடன் இரண்டு வார்த்தைகளைப் பகிர்ந்துகொள்ள ஒருமுறை கூட அவர்களைச் சந்திக்கவில்லை.

மணிப்பூருக்கு நீங்கள் கடைசியாகச் சென்றது எப்போது? ஜனவரி 2022 - தேர்தலுக்காக! உங்கள் "இரட்டை இன்ஜின்" அரசாங்கம், மணிப்பூரின் அப்பாவி மக்களின் வாழ்க்கையைச் சீர்குலைத்துள்ளது. இந்த அவசரமான பயணம், நீங்கள் வருந்தியதற்கான அறிகுறி அல்ல. குற்ற உணர்ச்சிகூட இல்லை. உங்களுக்காக ஒரு பிரமாண்டமான வரவேற்பு விழாவை நீங்களே ஏற்பாடு செய்கிறீர்கள். நீங்கள் அடிக்கடி கூறும் உங்கள் 'ராஜதர்மம்' எங்கே?” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Mallikarjun Kharge | PM Modi | Modi in Manipur | Manipur Riots |