ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அது நாட்டின் `பொருளாதாரத்தை மறுவடிவமைத்த மைல்கல் சீர்திருத்தம்’ என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். இதற்கு நேரெதிராக, ஜிஎஸ்டி ஏழைகளைத் தண்டித்து சில நிறுவனங்களுக்கு மட்டுமே பயனளித்த `பொருளாதார அநீதியின் ஒரு கருவி’ என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
101-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம், கடந்த 1 ஜூலை 2017-ல் ஜிஎஸ்டி வரி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஜிஎஸ்டி வரி 8 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள நிலையில், அது தொடர்பாக தன் எக்ஸ் கணக்கில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில் கூறியதாவது,
`அறிமுகப்படுத்தப்பட்ட எட்டு ஆண்டுகளில், இந்தியாவின் பொருளாதாரத்தை மறுவடிவமைத்த ஒரு மைல்கல் சீர்திருத்தமாக ஜிஎஸ்டி தனித்து நிற்கிறது. குறிப்பாக, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வணிகம் செய்வதை இது பெரிதும் எளிதாக்கியுள்ளது.
இந்திய சந்தையை ஒருங்கிணைப்பதற்கான இந்தப் பயணத்தில் மாநிலங்களை சம பங்காளிகளாக மாற்றுவதன் மூலம் உண்மையான கூட்டாட்சியை வளர்க்கும் அதே நேரத்தில், பொருளாதார வளர்ச்சிக்கு ஜிஎஸ்டி ஒரு சக்திவாய்ந்த இயந்திரமாகவும் செயல்பட்டுள்ளது’ என்றார்.
அதேநேரம், ஜிஎஸ்டியை அமல்படுத்தியதற்காக ராகுல் காந்தி மத்திய அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். ஜிஎஸ்டி தொடர்பான பிரதமரின் கருத்துகளுக்குப் பதிலளிக்கும் வகையில் தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி,
`மோடி அரசாங்கத்தின் ஜிஎஸ்டி ஒரு வரி சீர்திருத்தம் அல்ல - இது பொருளாதார அநீதி மற்றும் பெரு நிறுவன நட்புறவின் ஒரு மிருகத்தனமான கருவியாகும். இது ஏழைகளைத் தண்டிக்க, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை நசுக்க, மாநிலங்களை பலவீனப்படுத்த மற்றும் பிரதமரின் சில பணக்கார நண்பர்களுக்கு பயனளிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்போது தேநீர் முதல் சுகாதார காப்பீடு வரை அனைத்திற்கும் குடிமக்கள் ஜிஎஸ்டி செலுத்துகிறார்கள், அதேநேரம் பெருநிறுவனங்கள் ஆண்டுதோறும் ரூ. 1 லட்சம் கோடிக்கும் மேல் வரிச்சலுகைகளை அனுபவிக்கின்றன’ என்றார்.