ANI
இந்தியா

இனக்கலவரம் நடந்த 2 ஆண்டுகளுக்குப் பின் மணிப்பூர் செல்லும் பிரதமர் மோடி: பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடு | Manipur | PM Modi |

பிரதமர் மோடியை வரவேற்க வைக்கப்பட்ட பிரமாண்ட பேனர் அருகே மீண்டும் கலவரம் வெடித்ததால் பரபரப்பு...

கிழக்கு நியூஸ்

இனக்கலவரம் ஏற்பட்டு 2 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரதமர் மோடி மணிப்பூர் செல்லும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

மணிப்பூரில் கடந்த 2023 மே மாதம், மெய்தி - குக்கி இனக்குழுவினருக்கு இடையில் மோதல் வெடித்தது. அதன்பின் ஏற்பட்ட வன்முறையில் இரு தரப்பிலும் 280-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் வன்முறை ஏற்பட்ட பகுதிகளில் இருந்து 600-க்கும் மேற்பட்டோர் புலம்பெயர்ந்தனர். மக்கள் தங்கள் வீடுகளை இழந்ததால் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவரின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் நடந்தபோது ஒருமுறை கூட பிரதமர் மோடி நேரில் சென்று பார்வையிடவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்போது நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது கூட எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் இதுகுறித்த பிரச்னையை ஏற்படுத்தினர்.

இந்நிலையில், இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (செப்.13) பிரதமர் மோடி மணிப்பூர் செல்கிறார். அங்கு ரூ. 8,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இந்த பயணத்தின்போது, அவர் சுராசந்த்பூரில் ரூ. 7,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இம்பாலில் ரூ. 1,200 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மேலும், இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து, நிவாரணங்களை அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க மாநில அரசு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. மறுபுறம் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று (செப். 11) சுராச்சந்த்பூரில் மோடியை வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களை சிலர் அகற்ற முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பேனர்களை அகற்றியவர்கள் குக்கி இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதும், கலவரத்தை தொடக்கியவர்களில் சிலர் என்றும் கூறப்படுகிறது. தகவலறிந்து விரைந்த பாதுகாப்புப் படையினர், சமூக விரோதிகளை விரட்டி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

PM Modi | Manipur Violence | Manipur Riots | Manipur |