இந்தியா

ஜம்மு - காஷ்மீர் செல்கிறார் பிரதமர் மோடி!

`நமக்கான மற்றும் சமூகத்துக்கான யோகா’ என்பது இந்த வருட யோகா தினத்தின் நோக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராம் அப்பண்ணசாமி

ஜூன் 20, 21-ல் ஜம்மு – காஷ்மீருக்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்கு பல அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

ஜூன் 20 மாலை 6 மணி அளவில் `இளைஞர்களுக்கான அதிகாரமளிப்பு: ஜம்மு காஷ்மீரின் மாற்றம்’ என்ற பெயரிலான நிகழ்ச்சியில் ஸ்ரீ நகரில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி. இந்த விழாவில் ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேச அரசுப் பணிக்கு தேர்வாகியுள்ள சுமார் 2000 நபர்களுக்கான பணி ஆணையை பிரதமர் மோடி வழங்குகிறார்’.

அதைத் தொடர்ந்து 1500 கோடி மதிப்பிலான முக்கிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி. மிக முக்கியமாக 6 அரசுக் கல்லூரிகள் மற்றும் சென்னானி-பட்னிடாப்-நாஷ்ரி தொழில் எஸ்டேட்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் நிறைவுற்ற சில வளர்ச்சித் திட்டங்களை மக்கள் செயல்பாட்டுக்குத் திறந்து வைக்கிறார்.

இந்த வருடத்தின் 10வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜூன் 21 காலை 6.30 மணி அளவில், ஸ்ரீ நகரில் நடக்க இருக்கும் யோகா தின கொண்டாட்டங்களைத் தலைமை ஏற்று நடத்துகிறார் பிரதமர் மோடி. 2015 முதல், தில்லி, சண்டிகர், டேராடூன், ராஞ்சி, லக்னௌ, மைசூரூ, நியூ யார்க் போன்ற நகரங்களில் நடந்த யோக தினக் கொண்டாட்டங்களை தலைமையேற்றுள்ளார் மோடி.

`நமக்கான மற்றும் சமூகத்துக்கான யோகா’ என்பது இந்த வருட யோகா தினத்தின் நோக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட மற்றும் சமூகத்தின் நலனில் யோகாவுக்கு இருக்கும் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்த நோக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அடித்தட்டு மற்றும் ஊரக மக்களுக்கிடையே யோகா பரவ இந்த நோக்கம் வழிவகை செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.