ANI
இந்தியா

உலகளாவிய தொழில்நுட்ப எதிர்காலத்தில் இந்தியா முக்கிய பங்காற்றும் - பிரதமர் மோடி உறுதி | PM Modi |

எண்ணெய் கருப்புத் தங்கம் என்றால் சிப்கள் டிஜிட்டல் வைரங்கள் போன்றது என்றும் புகழாரம்...

கிழக்கு நியூஸ்

எண்ணெய் கருப்புத் தங்கம் என்றால், சிப்கள் டிஜிட்டல் வைரங்கள் போன்றது என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற 'செமிகான் இந்தியா 2025' நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், ”ஒரு காலத்தில் பெட்ரோலிய எண்ணெய் உலகப் பொருளாதாரத்தை மாற்றியமைத்த 'கருப்புத் தங்கம்' என்று கருதப்பட்டது. அதைப் போல, நவீன காலத்தில் செமிகண்டக்டர் சிப்கள் 'டிஜிட்டல் வைரங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. எதிர்காலத்தில் உலகளாவிய தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மையமாக இந்த சிப்கள் இருக்கும். அதில் இந்தியா ஒரு முக்கியப் பங்காற்றும்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஒரு டிரில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த செமிகண்டக்டர் துறையில், இந்தியா ஒரு முக்கிய பங்குதாரராக மாறுவதற்கான திறன் பெற்றுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், இந்த இலக்கை நோக்கி அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டிலிருந்து, இந்தியாவின் செமிகண்டக்டர் திட்டங்களில் சுமார் 18 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முதலீடுகள், உலகின் முக்கிய நிறுவனங்கள் இந்தியாவின் எதிர்காலத்தையும், இங்குள்ள திறமையான மனித வளத்தையும் நம்புவதைக் காட்டுகிறது” என அவர் குறிப்பிட்டார்.

”இத்துறையில் இந்தியா பல சவால்களையும் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. செமிகண்டக்டர் உற்பத்திக்குத் தேவையான பெருமுதலீடுகள், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் கடுமையான போட்டி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. ஆனால், இந்தியாவின் மென்பொருள் வடிவமைப்புத் திறனும், பொறியியல் துறையில் உள்ள அபாரமான திறமையும் இந்த சவால்களைச் சமாளிக்க உதவும்” என்று கூறிய பிரதமர் மோடி, இந்தியா, செமிகண்டக்டர் திட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு மத்திய அரசு தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.

மத்திய அரசின் புதிய ’வடிவமைப்பு சார்ந்த ஊக்கத்தொகை திட்டம்' விரைவில் தொடங்கப்படும் என்றும், இந்தத் திட்டம், செமிகண்டக்டர் வடிவமைப்பில் இந்தியத் திறமையை மேம்படுத்துவதையும், உள்நாட்டு நிறுவனங்களை உலகளாவிய போட்டிக்குத் தயார் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் பிரதமர் மோடி பேசினார்.