பூட்டானில் உரையாற்றிய பிரதமர் மோடி  
இந்தியா

தில்லி கார் வெடிப்பு: சதிகாரர்கள் தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் மோடி உறுதி | PM Modi |

விசாரணையின் அடி ஆழம் வரை சென்று புலனாய்வு அமைப்புகள் உண்மையைக் கண்டறியும்....

கிழக்கு நியூஸ்

தில்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்படுவார்கள் என்று பூட்டானில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும் பூட்டானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி பூட்டான் சென்றுள்ளார். இந்தப் பயணத்தின்போது பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக்கும் பிரதமர் மோடியும் இணைந்து இந்தியா - பூட்டான் கூட்டுறவின் முக்கிய மைல்கல்லான 1020 மெகாவாட் புனாட்சங்கு நீர்மின் திட்டத்தைத் தொடங்கிவைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பூட்டானின் திம்பூவில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

“இந்தியாவில் உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்று பொருள் தரும் வசுதைவ குடும்பகம் என்ற கொள்கையில் எங்கள் முன்னோர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அந்த உணர்வின் அடிப்படையில்தான் பூட்டானில் இன்று நடக்கும் உலக அமைதிக்கான பிரார்த்தனை விழாவில் இந்தியா பங்கேற்றுள்ளது. இன்று உலகம் முழுவதிலும் உள்ள ஞானிகள் உலக அமைதிக்காக பிரார்த்திக்கிறார்கள். இதில் 140 கோடி இந்தியர்களின் பிரார்த்தனைகளும் சேர்கிறது.

இன்று நான் இங்கு கனத்த இதயத்துடன் வந்திருக்கிறேன். நேற்று தில்லியில் கொடூரமான சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. நேற்றைய மாலை மிகவும் சோகமயமாக்கி இருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்களுடன் மொத்த இந்திய தேசமும் நிற்கிறது. விசாரணை அமைப்புகளிடம் நான் தொடர்ந்து பேசி வருகிறேன். இந்தச் சர்ச்சையின் அடி ஆழம் வரை அவர்கள் சென்று கண்டறிவார்கள். இதைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். இதில் தொடர்புடைய சதிகாரர்கள் அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்.

இந்த மேடையில் நான் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுகிறேன். வருங்காலத்தில் பூட்டானிலிருந்து சுற்றுலாப் பயணிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் வசதியாக கெலெப்பூ பகுதியில் புதிய குடியேற்றச் சாவடி ஒன்றை அமைக்கும்.

இந்தியா மற்றும் பூட்டானின் வளர்ச்சிப் பாதை ஒருங்கிணைந்தது. கடந்த ஆண்டு பூட்டானின் ஐந்தாண்டுத் திட்டத்திற்கு இந்தியா ரூ. 10,000 கோடி வழங்கியது. இது பூட்டான் குடிமக்களுக்கு வேளாண்மை, சாலை வசதி போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்பட்டன. இந்தியாவின் யுபிஐ சேவை இப்போது பூட்டானிலும் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா வந்தால் பூட்டான் குடிமக்களும் தடையின்றி யுபிஐ பயன்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.” என்றார்.

PM Modi while addressing the gathering in Bhutan said "The conspirators behind this will not be spared. All those responsible will be brought to justice" mentioning Delhi car blast.