விரைவில் ஏகே 203 ரக துப்பாக்கிகளையும் சுயசார்பு இந்தியா கொள்கைப்படி தயாரிப்போம் என்று பிரதமர் மோடி பேசினார்.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் பிரதமர் மோடி, 2025 ஆண்டுக்கான சர்வதேச வர்த்தகக் கண்காட்சியைத் தொடக்கி வைத்தார். அதன்பின் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
“சுயசார்பு இந்தியா கொள்கையின் மீது நமது அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. சின்ன மைக்ரோ சிப் முதல் கப்பல் வரை அனைத்தும் நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட வேண்டும். இதற்காக உங்கள் வணிகத்தை எளிதாக்குவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.
உலக அரசியல் சூழல் இடையூறுகளையும் நெருக்கடிகளையும் கொடுக்கிறது. அதற்கு மத்தியிலும் இந்தியாவின் வளர்ச்சி கவரத்தக்க வகையில் உள்ளது. நம் நாட்டுக்கான 10 ஆண்டுகளுக்கான அடித்தளத்தை நம் அரசு வலுப்படுத்துகிறது. அதற்கான உறுதியும் மந்திரமும் சுயசார்பு இந்தியா கொள்கை ஆகும். மற்றவர்களைச் சார்ந்து இருப்பதை விட உதவியற்றது எதுவுமில்லை. ஒரு நாடு மற்றவர்களைச் சார்ந்து இருக்கும் வரைஅதன் வளர்ச்சி சமரசமாகவே இருக்கும்.
நமது நிதி தொழில்நுட்பத்துறை அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியை வலுப்படுத்தி இருக்கிறது. யுபிஐ, ஆதார் போன்ற நமது முயற்சிகளின் தாக்கம் அனைத்து இடங்களிலும் தெரிகிறது. பெரிய வணிக வளாகத்திலும் சரி, சிறிய தேநீர் விற்பனையாளராக இருந்தாலும் சரி, அனைவருக்கும் யுபிஐ சிறப்பாகப் பயன்படுகிறது. நம் நாட்டில் ஒவ்வொருவரும் சுயசார்பு இந்தியா என்ற மந்திரத்தைப் பெருமையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நம் நாட்டில் தயாரிக்கப்படும் அனைத்து மொபைல் போன்களில் 55% உத்தர பிரதேசத்தில் தயாரிக்கப்படுகின்றன. செமி கண்டக்டர் துறையில் இந்தியாவின் தற்சார்பை உத்தர பிரதேசம் நிலை நாட்டும். நமது படைகள் மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்க விரும்புகின்றன. நாங்கள் இந்தியாவில் துடிப்பான ஒரு பாதுகாப்புத் துறையை உருவாக்கி வருகிறோம். விரைவில், ரஷ்யாவின் உதவியுடன் நம் நாட்டில் அமையவுள்ள தொழிற்சாலையில் ஏகே 203 ரக துப்பாக்கிகளின் உற்பத்தியை தொடங்குவோம். உத்தர பிரதேசத்தில் பாதுகாப்பு வழித்தடம் ஒன்று விரைவில் அமையவுள்ளது.”
இவ்வாறு தெரிவித்தார்.