இந்தியா

பாரதியார் படைப்புகளின் தொகுப்பை வெளியிட்ட பிரதமர் மோடி!

சமூகத்தில் பல பிரச்னைகள் நிலவிய அந்தக் காலகட்டத்திலேயே இளைஞர்கள் மற்றும் பெண்களின் அதிகாரமளிப்புக்காக அவர் வாதாடினார்.

ராம் அப்பண்ணசாமி

பாரதியாரின் 143-வது பிறந்தநாளை ஒட்டி அவரது படைப்புகளின் தொகுப்பை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி.

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 143-வது பிறந்தநாளை ஒட்டி, `காலவரிசையில் பாரதி படைப்புகள்’ என்ற பெயரிலான பாரதியார் படைப்புகளின் தொகுப்பை தலைநகர் தில்லியில் இன்று (டிச.11) வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி.

இந்தத் தொகுப்பில் பாரதியார் எழுத்துகளின் பதிப்புகள், விளக்கங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இதை சீனி விஸ்வநாதன் தொகுத்துள்ளார். இவர் பாரதியாரின் சகோதரரான விஸ்வநாதனுக்கு வழிகாட்டியாக இருந்தவர். இந்த நிகழ்வில் பிரதமர் மோடி பேசியவை பின்வருமாறு,

`மிகச்சிறந்த தமிழ் கவிஞரும், சுதந்திர போராட்ட வீரருமான சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளை இன்று தேசம் கொண்டாடுகிறது. அவருக்கு எனது அஞ்சலிகளை செலுத்துகிறேன். கோவிட் பெருந்தொற்று இருந்தபோதிலும் 2020-ல் அவரது நூற்றாண்டு நினைவு நாளை நாம் நினைவுகூறினோம். எதிர்காலத்தில் என்னென்ன இருக்கும் என்பதை புரிந்துகொண்ட நபராக அவர் திகழ்ந்தார்.

சமூகத்தில் பல பிரச்னைகள் நிலவிய அந்தக் காலகட்டத்திலேயே இளைஞர்கள் மற்றும் பெண்களின் அதிகாரமளிப்புக்காக அவர் வாதாடினார். அறிவியலில் அவருக்கு நம்பிக்கை இருந்தது. காசியில் நடப்பதை காஞ்சியில் அமர்ந்துகொண்டு பார்க்கும் அளவுக்கு எதிர்காலத்தில் உபகரணம் இருக்கும் என அவர் கூறினார். நாம் அத்தகைய உலகில் வாழ்கிறோம்’ என்றார்.

மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சாகித்ய அகாடமி ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்றது. இதில் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், இணையமைச்சர் எல். முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.