படம்: https://x.com/narendramodi
இந்தியா

தமிழ்நாடு, தமிழ் மக்களின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர் கருணாநிதி: பிரதமர் மோடி

கிழக்கு நியூஸ்

முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி தமிழ்நாடு மற்றும் தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர் என பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான மு. கருணாநிதியின் 101-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின், கோபாலபுர இல்லத்தில் உள்ள கருணாநிதியின் திருவுருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். கலைஞர் நூற்றாண்டு விழா மலரை வெளியிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், ‘கலைஞர் நூற்றாண்டு நிறைவு நினைவலைகள்’ என்ற சிறப்பு புகைப்படக் கண்காட்சியைத் திறந்து வைத்து அதனைப் பார்வையிட்டார்.

தில்லியிலுள்ள திமுக அலுவலகத்தில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் கருணாநிதியின் திருவுருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இந்த வரிசையில், பிரதமர் மோடியும் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வாழ்த்துகளைக் குறிப்பிட்டுள்ளார்.

"கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். பொதுவாழ்க்கையில் தமிழ்நாடு மற்றும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக அவர் பாடுபட்டுள்ளார். தனது அறிவாற்றலுக்காக அவர் பரவலாக மதிக்கப்பட்டவர். நாங்கள் இருவரும் அவரவர் மாநிலங்களின் முதல்வர்களாக இருந்தபோது உரையாடியது உள்பட அவருடனான உரையாடல்களை நினைவுகூர்கிறேன்" என்று பிரதமர் மோடி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.