கோப்புப்படம் ANI
இந்தியா

ஹரியாணா, ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவுகள்: பிரதமர் மோடி சொல்வது என்ன?

"ஜம்மு-காஷ்மீரில் நடத்தப்பட்ட இந்தத் தேர்தல் மிகச் சிறப்பானது."

கிழக்கு நியூஸ்

ஹரியாணா, ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவுகள் குறித்து கட்சித் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கின்றன. ஹரியாணாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

இதுதொடர்புடைய அவருடையப் பதிவு:

"பாஜகவுக்கு மீண்டும் அறுதிப்பெரும்பான்மை அளித்ததற்காக ஹரியாணா மக்களுக்கு நன்றி. இது வளர்ச்சி மற்றும் நல்லாட்சியின் அரசியலுக்கான வெற்றி. ஹரியாணா மக்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

மாபெரும் வெற்றிக்காக முழு அர்ப்பணிப்புடன் கடுமையாக உழைத்த கட்சித் தொண்டர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். ஹரியாணா மக்களுக்காக மட்டும் நீங்கள் செயல்படவில்லை. வளர்ச்சிக்கான நம் திட்டங்களை அவர்களிடத்தில் கொண்டு சேர்த்துள்ளீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் தேர்தல் குறித்து பதிவிட்டுள்ள அவர், "ஜம்மு-காஷ்மீரில் நடத்தப்பட்ட இந்தத் தேர்தல் மிகச் சிறப்பானது. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 மற்றும் 35 (ஏ) நீக்கப்பட்ட பிறகு நடத்தப்படும் முதல் தேர்தல் இது. மக்கள் அதிகளவில் வாக்களித்துள்ளார்கள். ஜனநாயகம் மீதான மக்களின் நம்பிக்கையை இது காட்டுகிறது. ஜம்மு-காஷ்மீரிலுள்ள ஒவ்வொருவருக்கும் நன்றி.

ஜம்மு-காஷ்மீரில் பாஜகவின் செயல்பாட்டை எண்ணி பெருமை கொள்கிறேன். கட்சியின் மீது நம்பிக்கை கொண்டு, கட்சிக்காக வாக்களித்த அனைவருக்கும் நன்றி. ஜம்மு-காஷ்மீரின் நலனுக்காகத் தொடர்ந்து செயல்படுவோம் என உறுதியளிக்கிறேன்.

ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் அசைக்க முடியாத செயல்பாட்டுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.