அஸ்ஸாம் மாநிலத்தில் விமானங்கள் தரையிறங்கும் வசதி கொண்ட தேசிய நெடுஞ்சாலையின் அவசர தரையிறங்கும் பகுதியில் முதன்முறையாக இறங்கி, அதனைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
அஸ்ஸாம் மாநிலத்தின் திப்ருகார் மாவட்டத்தில் உள்ள மோரான் பகுதியில் இந்திய அரசின் அவசர கால தரையிறங்கும் தளம், தேசிய நெடுஞ்சாலை 37-ல் அமைக்கப்பட்டுள்ளது. சாதாரண சாலைகளைப் போல் அன்றி, கனரக விமானங்கள் தரையிறங்கும் வகையில் சுமார் ரூ. 100 கோடி செலவில் 4.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த நெடுஞ்சாலைப் பகுதி வலுப்படுத்தப்பட்டுள்ளது. இது 40 டன் எடை வரையிலான போர் விமானங்களையும், 74 டன் வரையிலான எடை கொண்ட சரக்கு விமானங்களையும் தாங்கும் வலிமை கொண்டது. இந்திய விமானப்படை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இணைந்து சர்வதேசத் தரத்தில் இச்சாலையை உருவாக்கியுள்ளன.
நெடுஞ்சாலையில் தரையிறங்கிய மோடி
இதற்கிடையில் அஸ்ஸாமில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஒருநாள் பயணமாக அம்மாநிலத்திற்குப் பிரதமர் மோடி சென்றுள்ளார். அஸ்ஸாமின் சாபுவா விமான நிலையத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு அஸ்ஸாம் ஆளுநர் லட்சுமண பிரசாத் ஆச்சார்யா, முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் உள்ளிட்டோர் வரவேற்பளித்தனர். பின்னர் அங்கிருந்து விமானப் படையின் சி-130 ஜெ ரக போர் விமானத்தில் ஏறி, திப்ருகார் மாவட்டத்தில் உள்ள மோரன் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அவசர தரையிறங்கும் வசதியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் தரையிறங்கினார். இதில் முதல் முறையாக தரையிறங்கி இந்த வசதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
பிரதமர் மோடி பெருமிதம்
தொடர்ந்து, போர் விமானங்கள், போக்குவரத்து விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இடம்பெறும் இந்திய விமானப்படையின் 40 நிமிட வான்வழி காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார். ரூ.5,500 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள மேம்பாட்டுத் திட்டங்களையும் தொடங்கி வைத்தார். முன்னதாக இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் நேற்று பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: பிப்ரவரி 14 அன்று திப்ருகார் மற்றும் குவஹாத்தியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நான் அஸ்ஸாமில் இருப்பேன். காலை 10:30 மணிக்கு, திப்ருகாரில் உள்ள மோரன் நெடுஞ்சாலையில் உள்ள அவசர தரையிறங்கும் வசதியில் தரையிறங்குவேன். வடகிழக்கில் மாநிலங்களில் முதன்முறையாக இது உருவாக்கப்பட்டுள்ளது. சவாலான சூழ்நிலைகளில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளைச் சரியான நேரத்தில் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்கும், அவசரகால பதிலளிப்புக்கு இது முக்கியமானதாக இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
Prime Minister Narendra Modi made a historic landing at northeast's first emergency landing facility (ELF) aboard C-130J aircraft in Assam's Moran, beginning his one-day tour of the state that is slated to go to polls soon.