இந்தியா

காங்கிரஸ் ஆட்சி விவசாயத்தைப் புறக்கணித்து விட்டது: பிரதமர் மோடி | PM Modi |

விவசாயிகளின் வளர்ச்சி குறித்த எந்த நோக்கமும் இல்லாமல் முந்தைய ஆட்சி செயல்பட்டது என்றும் விமர்சனம்...

கிழக்கு நியூஸ்

வேளாண்துறை குறித்த எந்தக் கொள்கையும் இல்லாத முந்தைய காங்கிரஸ் ஆட்சி, விவசாயத்தைப் புறக்கணித்துவிட்டது என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

தில்லியில் வேளாண்துறை வளர்ச்சிக்காக, ‘பிரதமர் தன் தான்ய யோஜனா’, ‘பருப்பு வகைகளில் சுயசார்பின் குறிக்கோள்’ ஆகிய இரண்டு திட்டங்கள் ரூ. 35,440 கோடி செலவில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். அதன்பின் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

”இன்று இரண்டு முக்கியமான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை நாட்டின் சுயசார்பு மற்றும் விவசாயிகளின் நலன் கருதி அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்விரு திட்டங்களும் விவசாயிகளின் அதிர்ஷட்டத்தை மாற்றும். இதற்காக ரூ. 35,000 கோடிக்கும் மேல் அரசு செலவிடவுள்ளது.

கடந்த காங்கிரஸ் ஆட்சி நோக்கமற்ற பலவீனமான அரசாகச் செயல்பட்டது. விவசாயம் நமது வளர்ச்சிப் பயனத்தின் முக்கிய பங்கை வகிக்கிறது. கால மாற்றத்தில் விவசாயம் அரசின் ஆதரவைப் பெற்று வளர வேண்டியது அவசியம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக முந்தைய காங்கிரஸ் ஆட்சி விவசாயத்தைப் புறக்கணித்துவிட்டது. விவசாயத்திற்கு தேவையான நோக்கங்கள் ஏதுமில்லாத அந்த அரசில் வேளாண்துறையின் பல அமைப்புகள் தன்னிச்சையாகச் செயல்பட்டன. இதனாலேயே நாட்டின் விவசாய அமைப்பு தொடர் பலவீனத்தைச் சந்தித்தது.

21-ம் நூற்றாண்டில் இந்தியா மிக விரைவான வளர்ச்சிகளைக் கண்டு வருகிறது. நமது விவசாய அமைப்புகளில் ஏற்பட்டிருக்கும் இந்த அவசியமான சீர்திருத்தம், கடந்த 2014-ல் தொடங்கப்பட்டது. முந்தைய ஆட்சியின் பொறுப்பற்ற நடத்தையை நாம் மாற்றியிருக்கிறோம். விதை முதல் சந்தை வரை எண்ணற்ற சீர்திருத்தங்களையும் மேம்பாடுகளையும் விவசாயிகள் பயனளிக்கும் வகையில் மேற்கொண்டுள்ளோம்.

கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் விவசாயப் பொருள்களின் ஏற்றுமதி இரட்டிப்பாகி உள்ளது. வேளாண் உற்பத்தி 90 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்திருக்கிறது. பழங்கள், காய்கறிகளின் உற்பத்தி 64 மில்லியன் மெட்ரிக் டன்னுக்கும் மேல் அதிகமாகியுள்ளது. பால் உற்பத்தியில் இன்று நாம் முதலிடத்தில் உள்ளோம். உலகின் இரண்டாவது பெரிய மீன் உற்பத்தியாளராக இருக்கிறோம். நாட்டின் தேன் உற்பத்தியும் 2014-ஐ விட இரு மடங்காக உயர்ந்துள்ளது. இந்த ஆட்சிக் காலத்தில் 6 முக்கியமான உரத் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு 25 கோடி மண் வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. நுண் பாசன வசதி 100 லட்சம் ஹெக்டேர் நிலங்களைச் சென்றடைந்துள்ளன. பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் மூலம் ஏறத்தாழ ரூ. 2 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது” என்றார்.