பிஎஸ்என்எல் பயனர்களுக்கு நாடு முழுவதும் 4ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
ஒடிசா மாநிலத்தில் தொலைத்தொடர்பு, ரயில்வே, உயர்கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு, கிராமப்புற வீட்டு வசதி உள்ளிட்ட துறைகளில் ரூ. 60,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
முன்னதாக பெர்ஹாம்பூர் - சூரத் அடுகே உள்ள உத்னாவுக்கு இடையிலான அம்ரித் பாரத் ரயில் சேவையைப் பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
நிகழ்வின் முக்கிய அம்சமாக, தேசிய தகவல் தொடர்பு உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், சுதேசி தொழில்நுட்பத்துடன் ரூ. 37,000 கோடி செலவில் கட்டப்பட்ட 97,500 க்கும் மேற்பட்ட 4ஜி டவர்களைத் தொடங்கி வைத்தார். இதன் மூலம் தொலைத்தொடர்பு சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் டென்மார்க், ஸ்வீடன், தென்கொரியா, சீனா ஆகிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 5-வது நாடாக இணைந்தது.
ஏற்கெனவே 2.2 கோடி வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் 4ஜி சேவை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, புதிய தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் கூடுதலாக 26,700 கிராமங்களுக்கு 4ஜி சேஐ கிடைத்துள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள 4ஜி டவர்கள் சோலார் சக்தியைப் பயன்படுத்தி இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
அதன் பின் நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது:-
“பொருளாதார ரீதியாக அதிகாரம் பெற விரும்பும் நாடு, கப்பல் கட்டுமானத்தில் கவனம் செலுத்தும். பாஜக அரசு ஒரு பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளது. கப்பல் கட்டுமானத்தை ஊக்குவிக்க, ரூ.70000 கோடி தொகுப்பை அங்கீகரித்துள்ளோம். இது இந்தியாவிற்கு ரூ.4.5 லட்சம் கோடி முதலீட்டைக் கொண்டுவரும்.
தொலைத்தொடர்புத் துறையில் 2ஜி, 3ஜி, மற்றும் 4ஜி சேவைகள் தொடங்கப்பட்டபோது, இந்தியா மிகவும் பின்தங்கி இருந்தது. அப்போது சமூக ஊடகங்களில் என்னவெல்லாம் நகைச்சுவை செய்தார்கள் என்று நாம் அனைவரும் அறிவோம். இதனாலேயே தொலைத்தொடர்புத் துறையின் இந்த முக்கியமான தொழில்நுட்பத்தை இந்தியாவில் உருவாக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம். தற்போது பிஎஸ்என்எல் ஒரு சுதேசி 4ஜி தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது நமக்குப் பெருமை சேர்ப்பதாகும்.
4ஜி சேவைகளைத் தொடங்க உள்நாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்ட உலகின் முதல் 5 நாடுகளில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது. பிஎஸ்என்எல் மூலம் இந்தியா உலகளாவிய தொலைத்தொடர்பு உற்பத்தி மையமாக மாறியுள்ளது. சுதேசி 4ஜி நெட்வொர்க் இன்று இங்கிருந்து தொடங்குகிறது. இதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் 1 லட்சம் 4ஜி டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இனி அதிவேக இணையம் மற்றும் தொலைப்பேசி இணைப்பு பிரச்னையாக இருந்த தொலைதூர கிராமங்களும் எல்லை மாவட்டங்களும் பெரிதும் பயனடையும். இனி நமது வீரர்களும் பாதுகாப்பான உள்நாட்டு சேவைகளைப் பயன்படுத்த முடியும். ”