தில்லியில் பிரதமரின் புதிய அலுவலகம், தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலகம், அமைச்சரவைச் செயலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் அடங்கிய சேவா தீர்த் வளாகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
தில்லியில் சென்ட்ரல் விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்தின் கீழ், மத்திய அரசின் துறைகளுக்காக புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அவற்றில் முக்கிய அமைச்சர்களின் அலுவலகங்களும் முக்கிய அரசு அலுவலகங்களும் இடம்பெறவுள்ள. குறிப்பாக அதில் பிரதமரின் புதிய அலுவலகம் அமைகிறது. இந்நிலையில், அதற்கு ‘சேவா தீர்த்’ என்று பெயர் வைக்கப்பட்டது. அதேபோல் மத்திய அரசின் தலைமைச் செயலகத்திற்கு கர்த்தவ்ய பவன் என்று பெயரிடப்பட்டது.
புதிய கட்டடங்களைத் திறப்பு
இவற்றின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி புதிய கட்டடங்களைத் திறந்து வைத்தார். அவர் திறந்து வைத்த புதிய வளாகத்தின் பெயர்ப் பலகையில் குடிமக்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்று பொருள்தரும் ‘நாகரிக் தேவோ பவ’ என்ற வாசகமும் பொறிக்கப்பட்டுள்ளது. தில்லியின் வெவ்வேறு பகுதிகளில் அமைந்துள்ள அமைச்சரவை செயலகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் உள்ளிட்ட அலுவலகங்கள், இந்தப் புதிய வளாகத்திற்கு விரைவில் மாற்றப்படவுள்ளன. இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு பிரதமர் அலுவலகம் மாற்றப்படுவது இதுவே முதன்முறை. புதிய கட்டடத்தைத் திறந்து வைத்த பிரதமர் மோடி, அங்குள்ள பிரதமர் அலுவலகத்தில் அமர்ந்து 4 கோப்புகளுக்குக் கையெழுத்திட்டார்.
பிரதமர் கையெழுத்திட்ட முக்கிய திட்டங்கள்
ஒவ்வொரு குடிமகனுக்கும் உயிர் காக்கும் பாதுகாப்புத் திட்டமான பி.எம். ரஹத் திட்டத்தின் கோப்புகளில் பிரதமர் முதலில் கையெழுத்திட்டார். இத்திட்டத்தின் கீழ் ரூ. 1.5 லட்சம் வரை விலையில்லா மருத்துவ சேவை வழங்கும் காப்பீடு மக்களுக்கு வழங்கப்படவுள்ளது. உயிர் காக்கப்பட வேண்டிய முக்கியமான பொழுதுகளில் பண நெருக்கடி காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளை இத்திட்டம் குறைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லட்சாதிபதி பெண்கள் திட்டம் விரிவாக்கம்
லட்சாதிபதி பெண்கள் திட்டத்தை 6 கோடி பெண்களுக்கு விரிவாக்கும் திட்டத்திற்கான கோப்பிலும் பிரதமர் கையெழுத்திட்டார். ஏற்கெனவே 3 கோடி மகளிருக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வருமானம் வரும் வகையில் தொழில் முனைவோர் ஆக்கும் திட்டம் 2027-க்குள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை விரிவாக்கும் முயற்சியாக 6 கோடி பெண்களை லட்சாதிபதி மகளிராக்கும் திட்டத்திற்குக் கையெழுத்திட்டார்.
விவசாய உட்கட்டமைப்புக்கு கூடுதல் நிதி
விவசாயிகளுக்கு உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் ரூ. 1 லட்சம் கோடியாக உள்ள நிதியை, ரூ. 2 லட்சம் கோடியாக இரட்டிப்பாக்கும் திட்டத்தில் கையெழுத்திட்டார். இத்திட்டத்தின் மூலம் அறுவடைக்குப் பிறகு தேவைப்படும் அத்யாவசிய கட்டமைப்புகளான நெல் சேமிப்புக் கிடங்குகள், குளிர்பதன சேமிப்பகங்கள் உள்ளிட்டவற்றை அதிகப்படுத்தும்.
ஸ்டார்ட்அப்பை ஊக்குவிக்கும் வைப்புநிதி
ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு நிதியளிக்கும் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் 2.0 திட்டத்திற்கு ரூ. 10,000 கோடி வைப்பு நிதி உருவாக்கும் திட்டத்திற்கும் ஒப்புதல் அளித்து பிரதமர் மோடி கையெழுத்திட்டார். புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட உற்பத்தி, ஆழ்ந்த தொழில்நுட்பம் சார்ந்த துறையில் ஈடுபடும் நிறுவனங்களின் தொடக்க கால ஊக்கமாக செயல்படவுள்ள இந்தத் திட்டத்தின் மூலம் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உலக கண்டுபிடிப்பு முனையங்களில் நம் நாட்டை முதன்மைப்படுத்தும். பிரதமரின் புதிய சேவா தீர்த் அலுவலகத்தில் இருந்து கையெழுத்தாகியுள்ள நான்கு முக்கிய கோப்புகள் நாட்டின் வேர்நிலையில் இருந்து வளர்ச்சியை ஊக்குவித்து, நீண்ட கால பொருளாதார திறனை வளர்க்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Prime Minister Narendra Modi inaugurated 'Seva Teerth', the new building of the Prime Minister's Office, in New Delhi on Friday.