இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு 
இந்தியா

உங்கள் சரும பளபளப்பின் ரகசியம் என்ன?: மோடியைக் கேட்ட கிரிக்கெட் வீராங்கனை | PM Modi |

ஃபிட் இந்தியா இயக்கத்தில் பங்கேற்று, இந்தியாவை ஆரோக்கியமானதாக மாற்ற பெண்களுக்கு வலியுறுத்துங்கள்...

கிழக்கு நியூஸ்

மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணி வீராங்கனைகள், உலகக் கோப்பையுடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கடந்த நவம்பர் 2 அன்று இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில், 52 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது இந்திய மகளிர் அணி. இந்த வெற்றியை தேசமே கொண்டாடி வருகிறது.

இதையடுத்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பிரதமர் மோடியை தில்லியில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, பிரதமர் மோடியுடன் படமெடுத்துக் கொண்ட வீராங்கணைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

அப்போது வீராங்கனைகள் நெகிழ்ச்சியுடன் தங்கள் விளையாட்டு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர், “போட்டியின் கடைசி கேட்ச் எனக்கு வர வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது. என்னிடம்தான் அது வரும் என்று யாருக்குத் தெரியும். நான் அந்தப் பந்தை பத்திரமாக வைத்துள்ளேன். இது பல்லாண்டுகளாக எங்கள் முயற்சிக்குக் கிடைத்த பலன். 2017-ல் நாங்கள் உங்களைச் சந்தித்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அப்போது, ​​நாங்கள் கோப்பையுடன் வரவில்லை. ஆனால் இந்த முறை, பல ஆண்டுகளாக நாங்கள் கடுமையாக உழைத்து கோப்பையை இங்கு கொண்டு வந்திருப்பது எங்களுக்கு மிகுந்த மரியாதைக்குரிய விஷயம்” என்று கூறினார்.

ஹர்லின் கௌர் தியோல் என்ற வீராங்கனை பிரதமரிடம், “நீங்கள் எப்போதும் பொலிவுடன் இருக்கிறீர்கள். உங்களின் சரும பளபளப்பின் ரகசியம் பற்றிச் சொல்ல முடியுமா?” என்று கேட்டார். அதைக் கேட்டுச் சிரித்த பிரதமர் மோடி, “நான் அதைப்பற்றி யோசித்ததே இல்லை. 25 ஆண்டுகளாக அரசாங்கத்தின் தலைவராக இருக்கிறேன்… மக்களின் ஆசீர்வாதங்கள்தான் என்னை எப்போதும் பளபளப்பாக வைத்திருக்க உதவுகின்றன” என்று கூறினார்.

முக்கிய வீராங்கனையான ஜெமிமா ரோட்ரிக்ஸ், “வெற்றியின் எண்ணிக்கையால் ஒரு அணி வரையறுக்கப்படுவதில்லை. ஒரு தோல்விக்குப் பிறகு எப்படி எழுகிறது என்பதில் அது வரையறுக்கப்படுகிறது, இந்த அணி அதை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறது என்று நான் உணர்கிறேன். அதனால்தான் இது ஒரு சாம்பியன் அணி. இங்கிருக்கும் ஒற்றுமையை நான் இதுவரை பார்த்ததேயில்லை” என்று தனது அணிக்குப் புகழாரம் சூட்டினார்.

மற்றொரு வீராங்கனை தீப்தி சர்மாவிடம் அவரது கையில் ஹனுமான் படம் பச்சை குத்தப்பட்டிருந்தது குறித்து பிரதமர் மோடி கேட்டார். அதற்கு தீப்தி சர்மா, “எனக்கு விளையாட்டின்போது இந்த ஹனுமான் படம் பலம் கொடுத்தது” என்று கூறினார்.

பின்னர் வீராங்கனைகள் அனைவரிடமும், “நீங்கள் அனைவரும் வீட்டிற்குச் செல்லும்போது, உங்கள் பள்ளிக்குச் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடி, ஒரு நாள் அவர்களுடன் செலவிடுங்கள். மாணவர்களும் பள்ளியும் உங்களை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பார்கள். ஆண்டுக்கு மூன்று பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து அங்கு செல்லுங்கள். ஃபிட் இந்தியா இயக்கத்தில் பங்கேற்று, இந்தியாவை ஆரோக்கியமானதாக மாற்றுவதில் பெண்கள் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்துங்கள்” என்றார்.

Prime Minister Narendra Modi today hosted the champions of the Women’s World Cup at his residence. PM congratulated the team for the victory and praised their remarkable comeback.