அயோத்தி ராமர் கோயில் கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டது வெறும் காவிக்கொடி அல்ல, அது நாகரிகத்தின் மறுமலர்ச்சி என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. அதனைக் குறிக்கும் வகையில் கோயிலில் உள்ள 161 அடி உயரமுள்ள பிரதான கோபுரத்தின் உச்சியில் பிரதமா் நரேந்திர மோடி கொடியை ஏற்றினார். முன்னதாக இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக தில்லியில் இருந்து விமானம் மூலம் அயோத்திக்கு வருகைதந்த பிரதமர் மோடியை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் வரவேற்றார். தொடர்ந்து, காரில் சாலைவலம் மேற்கொண்ட பிரதமர் மோடி, சாலையின் இருபுறங்களிலும் குவிந்திருந்த பக்தர்களுக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
பின்னர், சேஷாவதார கோயில், அன்னபூரணி தேவி கோயில், சப்த மந்திா் உள்ளிட்ட பல கோயில்களில் சாமி தரிசனம் மேற்கொண்டார். இதையடுத்து, ராமா் கோயிலுக்குச் வந்த மோடி மூலவா் ஸ்ரீபாலராமரை வழிபட்டார். தொடர்ந்து முதல் தளத்தில் அமைந்த ராம தா்பாரில் நடைபெற்ற சிறப்புப் பூஜைகளிலும் பங்கேற்றார். பின்னர் ராமா் கோயிலின் கோபுரத்தில் பிரதமா் மோடி காவிக்கொடியை ஏற்றிவைத்தார். அதன்பின் உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது:-
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நாள் நமது பாரம்பரியத்தில் ஒரு பெருமையை ஏற்படுத்துகிறது. அதற்குக் காரணம் கோயிலின் கொடிக் கம்பத்தில் பொறிக்கப்பட்டுள்ள கோவிதார மரம். இது அகற்றப்பட்டபோது வரலாற்றின் பக்கங்களில் நமது மகிமை புதைபட்டது. இப்போது ராமர் கோயிலின் முற்றத்தில் இந்த மரம் மீண்டும் நிறுவப்படும்போது நமது அடையாளம் புத்துணர்ச்சியோடு மீள்வதை இது குறிக்கிறது. இது, நாம் நமது அடையாளத்தை இழந்தால், நம்மை நாமே இழந்து விடுவோம் என்பதைக் காட்டுகிறது.
முழு இந்தியாவும் உலகமும் இன்று ராம மயமாக உள்ளது. ஒவ்வொரு ராம பக்தரின் இதயத்திலும் அசாதாரண திருப்தி ஏற்பட்டுள்ளது. எல்லையற்ற நன்றியுணர்வும், அளவிட முடியாத இயற்கைக்கு அப்பாற்பட்ட பேரின்பமும் ஏற்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளின் காயங்கள் குணமடைந்துள்ளன. பல நூற்றாண்டுகளின் சத்தியம் இன்று நிறைவேறி இருக்கிறது. 500 ஆண்டுகளாக எரிந்து கொண்டிருந்த அந்த தியாகத்தின் நிறைவு நாள். இந்த வெறும் காவிக் கொடி அல்ல. இது இந்திய நாகரிகத்தின் மறுமலர்ச்சியின் கொடி. காவி நிறம், சூரிய வம்சத்தின் சின்னம், ஓம் வார்த்தை மற்றும் கோவிதார மரம் ராம ராஜ்ஜியத்தின் மகிமையை வெளிப்படுத்துகின்றன. இந்தக் கொடி ஒரு தீர்மானம், வெற்றி, படைப்புக்கான போராட்டக் கதை. இந்தக் கொடி, யுகங்கள் கடந்து மானிட சமூகம் முழுமைக்கும் ஸ்ரீ ராமரின் கட்டளைகளையும் உத்வேகங்களையும் எடுத்துரைக்கும்.
ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால் அதன் பாரம்பரியத்தின் மீது நாட்டு மக்கள் பெருமைப்பட வேண்டும். இன்னொரு முக்கியமான விஷயம், நாடு அடிமைத்தன மனநிலையிலிருந்து முழுமையான விடுதலை. 190 ஆண்டுகளுக்கு முன்பு, 1835 ஆம் ஆண்டில், மெக்காலே என்ற ஆங்கிலேயர் இந்தியாவை அதன் வேரிலிருந்து பிடுங்குவதற்கான விதைகளை விதைத்தார். மெக்காலே இந்தியாவில் அடிமைத்தனத்தின் அடித்தளத்தை அமைத்தார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு, 2035 இல், அந்த புனிதமற்ற நிகழ்வு நடந்து 200 ஆண்டுகள் முடிந்திருக்கும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு, இந்தியாவை அடிமைத்தனத்தின் மனநிலையிலிருந்து விடுவிக்கும் குறிக்கோளுடன் நாம் முன்னேற வேண்டும்.” என்றார்.
Ayodhya Dhwajarohan, PM Modi and RSS Sarsanghchalak Mohan Bhagwat ceremonially hoist the saffron flag on the Shikhar of the sacred Shri Ram Janmbhoomi Temple, symbolising the completion of the temple’s construction. UP CM Yogi Adityanath is also with them.