கோப்புப்படம் ANI
இந்தியா

2025-ல் அமித் ஷாவைப் பிரதமராக்குவார் மோடி: அரவிந்த் கெஜ்ரிவால்

கிழக்கு நியூஸ்

அமித் ஷாவைப் பிரதமராக்குவதற்காக பிரதமர் நரேந்திர மோடி வாக்கு சேகரித்து வருவதாக தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரப் பிரதேசத்திலுள்ள சமாஜவாதி அலுவலகத்துக்கு வந்தார். அங்கு சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் அவரைப் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதைத் தொடர்ந்து, இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள்.

செய்தியாளர்கள் சந்திப்பில் கெஜ்ரிவால் கூறியதாவது:

இண்டியா கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச மக்களிடம் வாக்கு சேகரிப்பதற்காக லக்னௌவுக்கு வந்துள்ளேன். நான்கு விவகாரங்கள் குறித்து பேச விரும்புகிறேன்.

இந்தத் தேர்தலில் அமித் ஷாவை பிரதமராக்குவதற்காக பிரதமர் மோடி வாக்கு சேகரித்து வருகிறார்.

இரண்டாவது, பாஜக ஆட்சிக்கு வந்தால், 2-3 மாதங்களில் யோகி ஆதித்யநாத் முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்படுவார்.

மூன்றாவது, இவர்கள் அரசியலமைப்பை மாற்றப்போகிறார்கள். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை நீக்கிவிடுவார்கள்.

நான்காவது விவகாரம், ஜூன் 4-ல் இண்டியா கூட்டணி ஆட்சியமைக்கப்போகிறது.

செப்டம்பர் 17, 2025-ல் பிரதமர் மோடி 75 வயதை அடைந்துவிடுவார். அமித் ஷாவை தனது அடுத்த வாரிசாக்க பிரதமர் மோடி முடிவு செய்துவிட்டார். செப்டம்பர் 17, 2025-ல் அமித் ஷாவை பிரதமராக்குவார். 75 வயதுக்குப் பிறகு ஓய்வு பெற மாட்டேன் என பிரதமர் இதுவரை சொல்லவில்லை. பிரதமர் மோடி இந்த விதியைக் கொண்டு வந்துள்ளார். இந்த விதியை அவர் பின்பற்றுவார் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது.

பாஜக 220-க்கும் குறைவான இடங்களை வெல்வார்கள் என்று கள நிலவரங்கள் சொல்கின்றன. ஹரியாணா, தில்லி, பஞ்சாப், கர்நாடகம், மஹாராஷ்டிரம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட் மற்றும் ராஜஸ்தானில் இவர்களுடைய இடங்கள் குறையப்போகின்றன. பாஜக ஆட்சியமைக்கப்போவதில்லை. இண்டியா கூட்டணிதான் ஆட்சியமைக்கப்போகிறது" என்றார் அரவிந்த் கெஜ்ரிவால்.

சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், "143-க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்ல மாட்டோம் என பாஜகவே நம்புகிறது" என்றார்.

ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து பதிலளிக்க அரவிந்த் கெஜ்ரிவால் மறுத்துவிட்டார். இதைவிட நிறைய முக்கியமான பிரச்னைகள் இருப்பதாக அகிலேஷ் யாதவ் பதிலளித்தார்.