படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம் ANI
இந்தியா

மேற்கு வங்கத்தில் டிஎம்சியின் ஊழல் ஆட்சி முடிவுக்கு வரும்: பிரதமர் மோடி | PM Modi |

நாட்டின் முதல் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்...

கிழக்கு நியூஸ்

தாமரைச் சின்னத்திற்கு வாக்களித்தால் மேற்கு வங்கத்தின் பழம்பெருமை மீட்டெடுக்கப்படும் என்று கூறிய பிரதமர் மோடி, ஆளும் திரிணாமுல் காங்கிரஸை சரமாரியாக விமர்சித்தார்.

மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு இரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, முதற்கட்டமாக ஹவுரா முதல் அசாமின் குவஹாத்தி வரையிலான நாட்டின் முதல் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார். அதற்கு முன்னதாக ரயிலில் ஏறி பார்வையிட்ட அவர், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளுடன் கலந்துரையாடினார்.

நியூ ஜல்பைகுரி - தமிழ்நாட்டிற்கு அம்ரித் பாரத் ரயில்

அதன்பின் ரூ. 3,250 கோடி மதிப்பிலான பல்வேறு ரயில் சாலை உட்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தார். குறிப்பாக நியூ ஜல்பைகுரி - நாகர்கோயில் இடையிலான அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ், நியூ ஜல்பைகுரி - திருச்சி இடையிலான அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில் சேவைகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

டிஎம்சியின் ஊழல் நின்று போகும்

அதன்பின் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் கூறியதாவது:-

“மேற்கு வங்கம் ஊடுருவல்காரர்களிடமிருந்து மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறது. ஊடுருவல்காரர்களை குடிமக்களாக்கி அவர்களை வாக்காளர்களாக மாற்றுகிறார்கள். அதனால் மாநிலத்தில் கலவரங்கள் அதிகரித்துள்ளன. பாஜக ஆட்சிக்கு வந்தவுடன், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். திரிணாமுல் காங்கிரஸ் அரசு மக்களுக்கு வெள்ள நிவாரணப் பணத்தை வழங்காமல் தங்களுக்கு வேண்டியவர்கள் கணக்குகளுக்கே 40 முறை நிதிகளைப் பிரித்து அனுப்பி ஊழல் செய்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்ததும் டிஎம்சியின் ஊழல் நடவடிக்கைக நின்றுபோகும்.

அகதிகளைக் குடியுரிமைச் சட்டம் காக்கும்

ஏழைகளுக்கு பயனளிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளையும் இங்குள்ள ஆளுங்கட்சி இரக்கமின்றித் தடுக்கிறது. அண்டை நாடுகளில் மதத் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க இங்கு வந்துள்ள நமது அகதிகள் பயப்படத் தேவையில்லை. அரசியலமைப்பு இந்த சக குடிமக்களுக்கு இந்தியாவில் வாழும் உரிமையை வழங்குகிறது. குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் இந்த அகதிகளுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும்.

பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை

நேற்றுதான், டிஎம்சி கட்சியினரால் பெண் ஊடகவியலாளர் ஒருவர் துன்புறுத்தலுக்கு ஆளான செய்தியைப் பார்த்தோம். டிஎம்சியின் ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை. இரக்கமற்ற நிர்வாகம் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. சிறுமிகளின் குறைகளைக் கேட்க யாரும் இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டியிருக்கிறது. உங்கள் ஒரு வாக்கு இதையெல்லாம் மாற்றிவிடும்.

மேற்கு வங்கத்தின் பழம்பெருமை மீட்கப்படும்

தாமரைச் சின்னத்திற்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் மேற்கு வங்கத்தின் பழம்பெருமையை மீட்டெடுக்கும். பாஜக தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் நான் சொல்லிக் கொள்கிறேன். மேற்கு வங்கத்தின் டிஎம்சியின் பயமுறுத்தும் அரசியல் அதிக காலம் நீடிக்காது. நாம் அதை நிறைவேற்ற வந்தே மாதரத்தின் உணர்வை நாம் எழுப்ப வேண்டும்” என்றார்.

PM Narendra Modi flagged off India’s first Vande Bharat Sleeper Train between Howrah and Guwahati (Kamakhya) in Malda, West Bengal.