ANI
இந்தியா

70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: பிரதமர் மோடி தொடக்கிவைப்பு

ரூ. 12,850 கோடி மதிப்புடைய பல்வேறு மருத்துவத் துறை திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடக்கி வைத்தார்.

கிழக்கு நியூஸ்

70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வருமான வரம்பைக் கருத்தில் கொள்ளாமல் மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடக்கிவைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த செப்டம்பர் 11 அன்று கூடியது. இந்தக் கூட்டத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் மதிப்புடைய மருத்துக் காப்பீடு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் 6 கோடி மக்கள் பயனடைவார்கள் என மத்திய அரசு அறிவித்தது.

இந்தக் காப்பீடு திட்டம் உள்பட ரூ. 12,850 கோடி மதிப்புடைய பல்வேறு மருத்துவத் துறை திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடக்கி வைத்தார். 9-வது ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு புதுதில்லியிலுள்ள ஏஐஐஏ-வில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயுஷ்மான் வயா வந்தனா அட்டையை பயனாளர்களுக்கு பிரதமர் மோடி வழங்கினார்.

தில்லி மற்றும் மேற்கு வங்கம் ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தில் இணைய மறுப்பு தெரிவித்தன. இந்தத் திட்டத்தில் 60 சதவீத நிதியை மத்திய அரசும் 40 சதவீத நிதியை மாநில அரசும் பங்களிப்பு செய்ய வேண்டும். இதற்கு மறுப்பு தெரிவித்து மாநில அரசின் காப்பீடு திட்டங்களைச் செயல்படுத்த தில்லி, மேற்கு வங்க அரசுகள் முடிவு செய்தன. இதன் காரணமாக, இந்த இரு மாநிலங்களுக்கும் இந்தத் திட்டம் பொருந்தாது.

இந்தக் காப்பீட்டுத் திட்டத்துடன் மற்ற பல திட்டங்களையும் பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். இந்தியாவின் முதல் அனைத்து ஏஐஐஏவின் இரண்டாம் கட்டத்தைத் தொடக்கி வைத்தார். மத்தியப் பிரதேசத்தில் மூன்று மருத்துவக் கல்லூரிகளைத் தொடக்கி வைத்தார். பல்வேறு எய்ம்ஸ் மருத்துவமனைகளில் புதிய வசதிகளைத் தொடக்கி வைத்தார்.