ANI
இந்தியா

சொந்தமாக நிலம், வீடு, கார் இல்லை; சொத்து மதிப்பு ரூ. 3.02 கோடி: பிரமாணப் பத்திரத்தில் மோடி தகவல்

கிழக்கு நியூஸ்

மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கலின்போது உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனிருந்தார்.

இதுதவிர தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த 25 தலைவர்கள் கலந்துகொண்டார்கள். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மஹாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யான், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வேட்புமனு தாக்கலின்போது வாரணாசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தார்கள்.

வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் பிரதமர் மோடி தனது சொத்து மதிப்பு ரூ. 3.02 கோடி எனக் குறிப்பிட்டுள்ளார். தன்னிடம் நிலம், கார், வீடு என எதுவும் இல்லை என்று பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, கையில் ரொக்கமாக ரூ. 52,290 வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பாரத ஸ்டேட் வங்கியில் இரண்டு கணக்குகளை வைத்துள்ளார் பிரதமர் மோடி. காந்தி நகர் வங்கிக் கிளையில் 73,304 ரூபாயும், வாரணாசி வங்கிக் கிளையில் 7 ஆயிரம் ரூபாயும் வைப்புத் தொகையாக வைத்துள்ளார்.