ANI
இந்தியா

மூன்றாம் கட்டத் தேர்தல்: வாக்களித்தார் பிரதமர் மோடி

கிழக்கு நியூஸ்

நாடாளுமன்றத் தேர்தல் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் பிரதமர் நரேந்திர மோடி அஹமதாபாதில் இன்று காலை வாக்களித்தார்.

குஜராத் மாநிலம் அஹமதாபாதில் நிஷான் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் பிரதமர் மோடியின் வாக்கு இருந்தது. மூன்றாம் கட்டத் தேர்தலில் வாக்களிப்பதற்காக பிரதமர் மோடி இந்தப் பள்ளிக்கு வருகை தந்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாக்குச்சாவடியில் பிரதமர் மோடியை வரவேற்றார்.

அமித் ஷாவுடன் வாக்குச் சாவடிக்குள் சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்தவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு, ஆட்டோகிராஃப் போட்டுக்கொடுத்தார்.

இதன்பிறகு, செய்தி நிறுவனங்களுக்குப் பேட்டியளித்த பிரதமர் மோடி, "இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாட்டு மக்கள் பெரிதளவில் வந்து வாக்களிக்க வேண்டும்" என்றார்.

மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 மக்களவைத் தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

குஜராத்தில் மொத்தமுள்ள 26 மக்களவைத் தொகுதிகளில் 25 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சூரத்தில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. மற்ற வேட்பாளர்கள் போட்டியிலிருந்து விலகுவதாகக் கூறி வேட்புமனுவைத் திரும்பப் பெற்றார்கள். எனவே, பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் மக்களவைக்குப் போட்டியின்றித் தேர்வாகியுள்ளார்.

2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் குஜராத்தில் உள்ள அனைத்தும் 26 இடங்களையும் பாஜக கைப்பற்றியது. இந்த முறை 26 இடங்களில் 24 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. பாவ்நகர் மறஅறும் பரூச் தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணியில் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது.