அவசர நிலை பிரகடனத்தைக் குறிப்பிட்டு காங்கிரஸ் கரங்களில் உள்ள பாவத்தை அழிக்கவே முடியாது என பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் உரையாற்றியுள்ளார்.
அரசியல் நிர்ணய சபையால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டதன் 75-வது ஆண்டைக் குறிக்கும் வகையில், அரசியலமைப்புச் சட்டம் மீது மக்களவையில் நேற்றும் இன்றும் விவாதம் நடைபெற்றது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை உரையாற்றினார். இந்தியாவை வழிநடத்தும் அரசியலமைப்புச் சட்ட நூலைவிட, மனுஸ்மிருதி மேலானது என சாவர்க்கர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதாக ராகுல் காந்தி பேசினார். "உங்களுடையத் தலைவரின் வார்த்தைகளை நீங்கள் (ஆளும் பாஜக அரசு) ஏற்றுக்கொள்கிறீர்களா எனக் கேட்க விரும்புகிறேன். அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் பேசுவதால், நீங்கள் சாவர்க்கரை அவமதிக்கிறீர்கள், அவரைக் கிண்டல் செய்கிறீர்கள்" என்று ராகுல் காந்தி பேசினார்.
இந்த விவாதத்தில் பிரதமர் மோடி தற்போது உரையாற்றி வருகிறார்
அவர் பேசியதாவது:
"நம் அனைவருக்கும், அனைத்துக் குடிமக்களுக்கும், உலகம் முழுக்க ஜனநாயகத்தை விரும்பும் குடிமக்கள் அனைவருக்கும் இந்தத் தருணம் மிகவும் பெருமைக்குரியது. இந்த 75 ஆண்டுகால சாதனை என்பது சாதாரண காரியமல்ல. அரசியலமைப்புச் சட்டம்தான் நம்மை இந்த இடத்துக்கு அழைத்து வந்துள்ளது. இந்தப் பெரும் சாதனைக்காக கோடிக்கணக்கான இந்திய மக்கள் முன் மரியாதையுடன் தலை வணங்குகிறேன்.
அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் எச்சரிக்கையுடன் இருந்தார்கள். இந்தியா 1947-ல் பிறந்ததாக அவர்கள் எண்ணவில்லை. 1950-ல் தான் இந்தியாவில் ஜனநாயகம் தொடங்கியது. நாம் மிகப் பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்ல. ஜனநாயகத்தின் பிறப்பிடமே நாம் தான்.
அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு 25 ஆண்டுகள் ஆனதைக் குறிப்பிட்ட அதே நேரத்தில், நம் நாட்டில் அரசியலமைப்புச் சட்டம் தகர்க்கப்பட்டது. அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. ஜனநாயக அமைப்புகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன. நாடே சிறையாக மாறியது. குடிமக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன. ஊடகச் சுதந்திரத்துக்குப் பூட்டு போடப்பட்டது. காங்கிரஸ் கரங்களில் உள்ள இந்தப் பாவத்தை ஒருபோதும் அழிக்க முடியாது. ஜனநாயகத்தின் குரல் நெரிக்கப்பட்டது.
ஏற்ற, இறக்கங்கள் இருந்துள்ளன. கடினமாக காலங்கள் இருந்துள்ளன. தடைகள் இருந்துள்ளன. ஆனால், அரசியலமைப்புச் சட்டத்துடன் வலிமையாகத் துணை நின்ற மக்களுக்காக மீண்டும் ஒருமுறை தலை வணங்குகிறேன்.
யார் மீதும் தனிப்பட்ட விமர்சனங்களை வைக்க விரும்பவில்லை. ஆனால், உண்மைகளை நாட்டு மக்கள் முன் வைப்பது முக்கியம். அதனால் தான் அதைச் செய்கிறேன். காங்கிரஸின் ஒரு குடும்பம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தது. நான் ஒரு குடும்பம் எனக் குறிப்பிடுவதற்குக் காரணம், 75 ஆண்டுகால பயணத்தில் 55 ஆண்டுகள் அவர்கள் தான் ஆட்சியில் இருந்தார்கள். எனவே, என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ளும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது. இந்தக் குடும்பத்தின் மோசமான சிந்தனைகள் மற்றும் தவறான கொள்கைகள் கொண்ட மரபு இன்னும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. இந்தக் குடும்பம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு அனைத்து நிலைகளிலும் சவால் கொடுத்தது.
1947 முதல் 1952 வரை இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கிடையாது. தற்காலிக அமைப்பு முறை, தேர்வு செய்யப்பட்ட அரசு தான் இருந்தது. தேர்தல்கள் நடத்தப்படவில்லை. தேர்தல் வரை இடைக்கால அரசு பொறுப்பிலிருந்தது. 1952-க்கு முன்பு மாநிலங்களவை அமைக்கப்படவில்லை. மாநிலங்களுக்கும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. மக்கள் தீர்ப்பே கிடையாது.
1951-ல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாதபோது, அவசரச் சட்டம் மூலம் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. கருத்துச் சுதந்திரம் தாக்குதலுக்கானது. அரசியலமைப்பை உருவாக்கியவர்களுக்கு இது அவமானகரமானதாக அமைந்தது. வாய்ப்பு கிடைத்தவுடன், கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராகச் செயல்பட்டார். அரசியலமைப்பு நிர்ணயச் சபையால் அமல்படுத்த முடியாததை, அவர் (நேரு) பின்வாசல் வழியாகச் செயல்படுத்தினார். அதுவும் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு பிரதமராக இருந்தபோது. அவர் பாவம் இழைத்துவிட்டார்" என்றார் பிரதமர் மோடி.