கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இமாச்சல பிரதேசத்துக்கு ரூ. 1500 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
வட இந்தியாவின் பல மாநிலங்களில் கடந்த சில வாரங்களாகக் கனமழை கொட்டி வருகிறது. உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், டெல்லி ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது மட்டுமன்றி உயிரிழப்புகளும் பொருட்சேதங்களும் ஏற்பட்டன. குறிப்பாக இமாச்சல பிரதேசத்தில் பல்வேறு பகுதிகளில் மலைச்சரிவு ஏற்பட்டது. இதனால் சாலைப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. கனமழையை தொடர்ந்து பல இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மண், பாறை குவியல்களால் சாலை இருந்த இடமே தெரியாமல் மறைந்துள்ளன. அவற்றை அப்புறப்படுத்தி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள இன்னும் சில நாட்கள் தேவைப்படும் எனக் கூறப்படுகிறது. இதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பஞ்சாப், இமாச்சல பிரதேசத்திற்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். முதலில் இமாச்சல பிரதேசத்திற்கு சென்ற அவர், ஹெலிகாப்டர் மூலம் வெள்ள சேதங்களைப் பார்வையிட்டார். வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பிடுவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அமைச்சர்கள் மாநிலத்தின் நிலைமையைப் பிரதமருக்கு எடுத்துரைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வெள்ள பாதிப்பால் அவதிப்பட்டு வரும் மாநிலத்திற்கு ரூ. 1,500 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். மேலும் மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் : “வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேசத்தின் நிலைமையை மதிப்பிடுவதற்கு வான்வழி ஆய்வு மேற்கொண்டேன். இந்த கடினமான நேரத்தில் நாங்கள் மக்களுடன் உறுதியாக நிற்கிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொடர்ச்சியான ஆதரவை உறுதிசெய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
Himachal Floods | PM Modi | Himachal rains | Flood relief fund | Himachal Pradesh |