இந்தியா

மாருதி சுஸுகியின் முதல் மின்சார கார்: நூறு நாடுகளுக்கு ஏற்றுமதியை தொடங்கி வைத்த பிரதமர் மோடி! | e-VITARA

இ-விட்டாரா மின்சார காருக்கான ஆரம்ப விலை தோராயமாக ரூ. 20 லட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராம் அப்பண்ணசாமி

இந்திய இறக்குமதிகள் மீது டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிர்வாகம் விதித்த கூடுதல் வரிகள் அமலுக்கு வருவதற்கு முன்பாக, சுஸுகி மோட்டர் ஆலையின் ஹைப்ரிட் பேட்டரி எலக்ட்ரோடுகளின் உற்பத்தியை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆக. 26) தொடங்கி வைத்தார்.

மேலும், மாருதி சுஸுகியின் முதல் உலகளாவிய பேட்டரி மின்சார கார் மாடலான இ-விட்டாராவை, 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிகழ்வையும் பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வுக்கு முன்னதாக தனது எக்ஸ் கணக்கில் வெளியிட்ட பதிவில் பிரதமர் மோடி கூறியதாவது,

`இந்தியாவின் தற்சார்புக்கான தேடலுக்கு இன்று சிறப்பான நாளாகும். ஹன்சல்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில், இ-விட்டாராவை (e-VITARA) கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்படும். இந்த பேட்டரி மின்சார வாகனம் (BEV) இந்தியாவில் தயாரிக்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

நமது பேட்டரி தேவைக்கான ஒரு பெரிய ஊக்கமாக, குஜராத்தில் உள்ள ஒரு ஆலையில் ஹைப்ரிட் பேட்டரி எலக்ட்ரோடுகளின் உற்பத்தியும் தொடங்கும்.’ என்றார்.

இந்த இ-விட்டாரா மின்சார காருக்கான ஆரம்ப விலை தோராயமாக ரூ. 20 லட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா BE6, ஹூண்டாய் க்ரெட்டா எலக்ட்ரிக், எம்.ஜி. ZS EV ஆகிய பிற மின்சார கார்களுக்கு இது போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஹைப்ரிட் மற்றும் மின்சார வாகன பேட்டரி உற்பத்திக்கு மிகப்பெரிய அளவில் ஊக்கமளிக்கும் விதமாக, சுஸுகி, தோஷிபா மற்றும் டென்சோவால் அமைக்கப்பட்ட லித்தியம்-அயன் பேட்டரி உற்பத்தி ஆலையையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

லித்தியம்-அயன் பேட்டரிகளுக்குத் தேவையான 80 சதவீதத்திற்கும் அதிகமான கூறுகள் இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும்.