ANI
இந்தியா

இவையெல்லாம் வதந்திகள், நம்ப வேண்டாம்: இந்திய அரசு

ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து, சமூக ஊடகப் பக்கங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.

கிழக்கு நியூஸ்

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பயங்கரவாத முகாம்களில் இந்தியா தாக்குதல் நடத்திய நிலையில், இதுதொடர்பாகப் பகிரப்பட்டு வரும் பல்வேறு வதந்திகளை இந்தியா மறுத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் நேபாளி உள்பட 26 பேர் உயிரிழந்தார்கள். இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி தரும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களைக் குறிவைத்து நேற்று நள்ளிரவு இந்தியா தாக்குதல் நடத்தியது.

இதில் 9 பயங்கரவாத முகாம்கள் வெற்றிகரமாகத் தாக்கி அழிக்கப்பட்டதாக இந்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாத வகையில், தாக்குதல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவைச் சேர்ந்த 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய அரசு தரப்பில் இதுமாதிரியான தகவல்கள் எதுவும் உறுதிபடுத்தப்படவில்லை.

மத்திய அரசின் உண்மை கண்டறியும் பிரிவு, பல்வேறு தகவல்கள் பொய்ச் செய்தி, வதந்தி என்று தெளிவுபடுத்தி வருகிறது. சமூக ஊடகங்களில் பல்வேறு பாகிஸ்தான் ஆதரவு பக்கங்களிலிருந்து, பாகிஸ்தான் விமானப் படை, ஸ்ரீநகர் விமானப் படைத் தளத்தைக் குறிவைத்ததாகத் தகவல்கள் பரவி வந்தன. இதுதொடர்பாகப் பகிரப்பட்டு வரும் காணொளிகள் அனைத்தும் பழையவை மற்றும் இந்தியாவிலிருந்து எடுக்கப்பட்ட காணொளிகள் அல்ல என்றும் உண்மை கண்டறியும் பிரிவு சார்பில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. கடந்த 2024-ல் பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வாவில் நிகழ்ந்த சம்பவத்தின் காணொளி என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஒரு படையின் தலைமையகத்தை பாகிஸ்தான் அழித்ததாக சமூக ஊடகங்களில் பொய்யானத் தகவல்கள் பரவி வருகின்றன. இது பொய்ச் செய்தி என்றும் இந்திய அரசின் உண்மை கண்டறியும் பிரிவு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ஆதரவு சமூக ஊடகப் பக்கங்களிலிருந்து விமானம் வெடித்துச் சிதறிய பழைய படம் பகிரப்பட்டு வருகிறது. இது கடந்த செப்டம்பர் 2024-ல் ராஜஸ்தான் மாநிலத்தில் வெடித்த இந்திய விமானப் படையின் மிக்-29 போர் விமானப் படம் என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

பொய்யானத் தகவல்கள் எதையும் பரப்ப வேண்டாம், இந்திய அரசின் அதிகாரபூர்வ அறிவிப்புகளை மட்டும் நம்ப வேண்டும் என்றும் உண்மை கண்டறியும் பிரிவு தெரிவித்துள்ளது.